அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு; ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் குழு அமைப்பு

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்கவும் புதிதாக மற்றொரு பல்கலை கழகத்தை தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-12-17 10:09 GMT
சென்னை

அண்ணா பல்கலைகழகத்தில் படிப்பது என்பதை தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாணவர்கள் அனைவராலும் பெருமையாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வெளியாகி வந்தது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை பல்வேறு பாடப்பிரிவின் கீழ் இயங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கக் கூடிய பாடப்பிரிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கவனித்து வருகிறது. இந்நிலையில் அண்ணா  பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து ஒன்றை ஆய்வு பல்கலைக்கழகமாக  மாற்ற தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

ஆய்வு பல்கலைக்கழகமாக மாற்றப்படும்போது அங்கு இருக்கக்கூடிய பாடப்பிரிவுகள் சார்ந்த உயர் ஆய்வுகள் செய்ய முடியும். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இந்தியாவில் இருக்கக்கூடிய ஆய்வு மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகம் வந்து பொறியியல் படிப்புகள், பல்வேறு பாடப்பிரிவுகள்  சார்ந்த உயர் ஆய்வுகளை மேற்கொள்ள அது வழிவகை செய்யும். அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய பல்கலை கழகம், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கும்.

அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. பின்னர் அமைச்சர்கள் குழுவின்  பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும்.

மேலும் செய்திகள்