3-ம் கட்ட தடுப்பூசி திட்டம்: தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும் பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2021-04-27 02:11 GMT
சென்னை, 

மத்திய சுகாதார அமைச்சகம், நாடு முழுவதும் செயல்படுத்த உள்ள 3-ம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் புதிய கொள்கையை அறிவித்துள்ளது. இந்த கொள்கையின் படி, தடுப்பூசியை வாங்கவும், 18 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான பொறுப்பினையும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தடுப்பூசியை, அதனை உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விலையில் மாநில அரசுகள் வாங்கவேண்டும்.

மாநில அரசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, மத்திய அரசு வாங்கும் விலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. சில உற்பத்தியாளர்கள் மாநில அரசுகளுக்கு அதிக விலையை நிர்ணயித்து ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தவிக்கும் சூழ்நிலையில், அதிக வித்தியாசத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது முற்றிலும் நியாயமானது இல்லை. மத்திய அரசை விடவும், மாநில அரசுகள் குறைவான நிதி ஆதாரங்களை பெற்றிருக்கும் சூழலில் இது அநீதியானது.

மத்திய அரசே வழங்கவேண்டும்

2021-22 பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் கொரோனா 3-ம் கட்ட தடுப்பூசியையும் மத்திய அரசு வழங்கும் என்ற முறையான எதிர்பார்ப்பு மாநில அரசுகளிடம் உள்ளது. இந்தச்சூழலில், 18 வயது முதல் 45 வயது உடையவர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் வழங்குவதற்கு தேவையான தடுப்பூசி முழுவதையும் மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும்.

மேலும் வரும் வாரங்களில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் சுமுகமாகவும், துரிதமாகவும் நடைபெறும் வகையில் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்தல் உள்பட மாற்று ஆதாரங்களையும் மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்