சென்னை விமான நிலையத்தில் ரூ.63¾ மதிப்புள்ள லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.63¾ மதிப்புள்ள லட்சம் தங்கம், வெள்ளியை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த சங்கர் நாகராஜன் (வயது 28), பல்லாவரத்தை சேர்ந்த முகமது அலி (30), மும்பையை சேர்ந்த முகமது யூசுப் (30), சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜமால் முகமது (25) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை சோதனை செய்தனர். அப்போது 4 பேரும் தங்களுடைய உள்ளாடைக்குள் தங்க, வெள்ளி நகைகளை ரகசியமாக மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து 4 பேரிடம் இருந்து ரூ.48 லட்சத்து 57 ஆயிரம் மதிப்புள்ள 95 கிலோ 380 கிராம் வெள்ளி ஆபரண நகைகளையும், ரூ.15 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள 343 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி வந்த 4 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.