வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
மண்டைக்காடு அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசர் தேடி வருகிறார்கள்.;
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசர் தேடி வருகிறார்கள்.
கொத்தனார் மனைவி
மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலம் பாணன்விளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவர் சவூதி அரேபியாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நிர்மலா (வயது 43). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நிர்மலா தனது 2 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அனைவரும் தூங்கச் சென்றனர். நள்ளிரவு 1.40 மணியளவில் நிர்மலா படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நகை பறிப்பு
அப்போது, அவரது கழுத்தில் ஏதோ ஊர்வது போல் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது, மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு பின்பக்கம் வழியாக தப்பியோடினார். இதனால், அதிர்ச்சி அடைந்த நிர்மலா சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் நிர்மலாவின் வீட்டின் அருகில் ஏற்கனவே ஒரு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற தனது 2 கூட்டாளிகளுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். பின்னர், நிர்மலா வீட்டுக்குள் வந்து பார்த்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர், படுக்கை அறையில் பீரோவை திறந்து பார்த்தும், அங்கு நகை, பணம் இல்லாததால் நிர்மலாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது.
பரபரப்பு
இதுகுறித்து நிர்மலா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.