டாக்டர் என்று கூறி ஏமாற்றி திருமணம் செய்து விட்டு நர்சை மிரட்டிய கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டத்தில் டாக்டர் என கூறி ஏமாற்றி நர்சை காதல் திருமணம் செய்த லேப் டெக்னீசியன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-06-02 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் டாக்டர் என கூறி ஏமாற்றி நர்சை காதல் திருமணம் செய்த லேப் டெக்னீசியன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசில் நர்சு மனு

பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நான் பூதப்பாண்டி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறேன். இந்த ஆஸ்பத்திரிக்கு சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவர் சிகிச்சைக்காக வந்தார். அவர் தான் ஒரு டாக்டர் என்றும், சேலத்தில் கிளினிக் மற்றும் லேப் வைத்துள்ளதாக கூறினார். பிறகு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் சேலத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினோம்.

டாக்டர் என ஏமாற்றினார்

இதற்கிடையே அவர் டாக்டர் இல்லை என்றும், லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து என்னை சக்தி தாக்கினார். இந்த நிலையில் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால் வேறு வழி இன்றி அவருடன் தொடர்ந்து குடும்பம் நடத்தினேன். அதன்பிறகும் தொந்தரவு அதிகரித்தது. அதே சமயத்தில் மேலும் சில பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் எனது பணம் மற்றும் நகைகைளை அபகரித்து கொண்டு, என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்.

மேலும் சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த 34 வயது பெண்ணுடன் எனது கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி கேட்டபோது என்னையும், எனது குழந்தைகளையும் அவர்கள் மிரட்டி தாக்கினர். இதனால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே கணவர் சக்தி மற்றும் சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுத்து அபகரித்த பணம் மற்றும் நகைகளை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இதுதொடர்பாக சக்தி மற்றும் 34 வயதுடைய பெண் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406 மற்றும் 494 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்