ரேஷன் கடைகள் மூலம் எப்படி பொங்கல் ரொக்கம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் - கலெக்டர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை
ரேஷன் கடைகள் மூலம் எப்படி பொங்கல் ரொக்கம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.;
கோப்புப்படம்
தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:-
அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாதரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் ரொக்க தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
* அதன்படி 1,500-க்கு மேல் மற்றும் 2 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் இணைக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகளில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்யும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ரேஷன் கடைக்கு அதிகளவில் மக்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் முதல் நாள் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகல் 100 பேருக்கும், 2-ம் நாள் முதல் நாள் ஒன்றுக்கு 300 பேருக்கும் என வழங்க வேண்டும். குடும்ப அட்டைத்தாரர்கள் பரிசு தொகுப்பு பெறவேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாக குறிப்பிட்டு டோக்கன்கள் அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று கடை பணியாளர்கள் மூலம் நேரடியாக வழங்க வேண்டும். மேலும் தெரு வாரியாக வினியோகம் செய்யப்படும் விவரம் கடைகளின் முன்பாக காட்சிப்படுத்த வேண்டும்.
* பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வினியோகம் செய்ய ஏதுவாக 9-ந்தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும். அதற்கு ஈடுசெய்யும் விதமாக அடுத்த மாதம் 7-ந்தேதி விடுப்பு வழங்கப்படும்.
* சட்டம்-ஒழுங்கு ஏற்படக்கூடிய ரேஷன் கடைகளில் போதிய போலீஸ் பாதுகாப்பு கேட்டு பெறவேண்டும்.
* பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் தொடர்பான புகார்களை பெற மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுடன் செயல்படும் வண்ணம் அமைக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்பதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
* பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை ரேஷன் கடைகளின் விற்பனை முனைய எந்திரத்தில் விரல் ரேகை சரிபார்ப்பு வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இதர நபர்களிடம் (இணைய வழியாக நியமிக்கப்பட்ட பிரதிநிதி நபர்கள் நீங்கலாக) வழங்குவதற்கு அனுமதியில்லை. தொழில்நுட்ப காரணங்களால் கைரேகை சரிபார்ப்பு பணி சரிவர மேற்கொள்ளப்பட இயலாத நேரங்களில் அதற்குரிய பதிவேட்டில் உரிய கையெழுத்து பெற்று வழங்க வேண்டும்.
* பொங்கல் ரொக்கத்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கும்போது ரேஷன் கடை பணியாளர்கள் ரூபாய் நோட்டுகளை கவர்களில் மறைமுகமாக வழங்கக்கூடாது. பயனாளிகளின் முன்பே நோட்டுக்களை எண்ணி பயனாளிகளின் கைகளிலேயே வழங்க வேண்டும்.
* பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத்தொகை அனைவருக்கும் விடுதலின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.