மலைப்பாதையில் தீப்பற்றி எரிந்த சுற்றுலா பஸ்

ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் சுற்றுலா பஸ் தீப்பற்றி எரிந்தது. இதில் மாணவர்கள் உள்பட 57 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2023-10-08 20:15 GMT
ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலைப்பாதையில் சுற்றுலா பஸ் தீப்பற்றி எரிந்தது. இதில் மாணவர்கள் உள்பட 57 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுற்றுலா பஸ்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 2-வது சீசன் தொடங்கி உள்ளது. இங்கு நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் சொந்த வாகனங்களில் அல்லது வாடகை வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வர தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயல்படும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட 57 பேர், கடந்த 6-ந் தேதி இரவு 11.30 மணியளவில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பஸ்சில் சுற்றுலா புறப்பட்டனர்.

நேற்று முன்தினம் ஊட்டியை அடைந்த அவர்கள், தாவரவியல் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். பின்னர் இரவு 8.30 மணியளவில் நாமக்கல்லுக்கு புறப்பட்டனர்.

அலறியடித்து இறங்கினர்

நள்ளிரவு 12.15 மணியளவில் ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் கல்லாறு அருகே பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென பஸ்சின் வலது பின்புற டயரில் தீப்பற்றியது.

இதை பின்னால் வந்த மற்றொரு வாகன டிரைவர் பார்த்து, பஸ்சின் டிரைவருக்கு தெரியப்படுத்தினார்.

உடனே அவர், சாலைேயாரத்தில் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பஸ்சுக்குள் இருந்த அனைவருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் அலறியடித்து கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கொழுந்து விட்டு எரிந்த தீ

இதற்கிடையில் டயரில் பற்றிய தீ மள மளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அங்கு மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பாலசுந்தரம், பாலச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

3 மணி நேர போராட்டம்

தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்