அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்க நடவடிக்கை: கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பா.ஜ.க. நிர்வாகிகள் மனு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவியிடம் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Update: 2022-09-10 17:24 GMT

பணம் வாங்கியதாக ஒப்புதல்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 2011 முதல் 2014 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது போக்குவரத்துத்துறை அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு பணம் வாங்கிக்கொண்டு வேலை போட்டு கொடுத்ததாக போக்குவரத்து துறை அதிகாரியே புகார் செய்தது தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பை கொடுத்துள்ளது.

அதாவது இந்தியாவிலேயே முதன்முறையாக ஊழல் வழக்கில் ஒரு அரசு பணியில் இருக்கும் அமைச்சர்தான் பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டு உள்ளார். பணம் கொடுத்ததாக 2 பேர் ஒப்புக்கொண்டு உள்ளனர். பணத்தை வாங்கி கொடுத்ததாக ஒரு முகவர் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஐகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்து உள்ளது. எனவே, தார்மீக அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக செய்ய வேண்டும்.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கவர்னரை சந்தித்து, கவர்னருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கவர்னரிடம் மனு அளித்தனர்

அதன்படி, பா.ஜ.க. சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியின் துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, ஏ.ஜி.சம்பத், சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் எம்.என்.ராஜா ஆகியோர் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, "அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செந்தில்பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறையில் ஆட்கள் சேர்ப்பதற்கு அவருடைய உதவியாளர் சண்முகம் மூலமாக ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்தவித அரசியல் மற்றும் அரசு வக்கீல்களின் தலையீடு மற்றும் உதவிகள் இல்லாமல் கோர்ட்டில் வழக்கு நடைபெறுவதற்கு இந்த தி.மு.க. அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று கவர்னரிடம் வழங்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்