ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்-கண்டக்டர்கள் திடீர் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு

ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் நடத்தியதால் அரசு பஸ்களை நிறுத்தி டிரைவர்- கண்டக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Update: 2022-09-09 08:58 GMT

காஞ்சீபுரம் பஸ் நிலையம், ஓரிக்கை 1, ஓரிக்கை 2 ஆகிய 3 டெப்போக்களில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று அதிகாலை ஓரிக்கை 2 டெப்போவில் இருந்து புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ், பாலுசெட்டிசத்திரத்தை சேர்ந்த கண்டக்டர் உமாபதி ஆகியோர் தாம்பரம் செல்ல பஸ்சை இயக்கி கொண்டு காஞ்சீபுரம் பஸ் நிலையத்தை சென்றடைந்தனர்.

காஞ்சீபுரம் பஸ் நிலையம் எதிரில் வந்தபோது எதிரே தவறான பாதையில் ஆட்டோவை ஓட்டி வந்த தீபக் என்ற புல்லட் தீபக் (வயது 28) பஸ்சின் முன்பு ஆட்டோவை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார்.

இது குறித்து பஸ் டிரைவர் சுரேஷ், தட்டிக்கேட்டபோது அவருடன் தீபக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதே நேரத்தில் செய்யாறில் இருந்து வந்த மற்றொரு பஸ் டிரைவர் தனஞ்செழியன், ஆட்டோவை அங்கிருந்து இயக்கும்படி சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் தீபக், 2 ஆட்டோ டிரைவர்களை அழைத்துக்கொண்டு தனஞ்செழியன் மற்றும் சுரேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்த தீபக், அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் சுரேஷ் மற்றும் தனஞ்செழியனை தாக்கினார். இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார். தனஞ்செழியன் லேசான காயம் அடைந்தார்.

அங்கு இருந்தவர்கள் சுரேஷ் மற்றும் தனஞ்செழியனை சிகிச்சைககாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பஸ்களை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் சமசரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்று போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தை கவைிட்டனர்.

இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் தீபக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம், திருப்பதி, வேலூர், செங்கல்பட்டு, சென்னை, செய்யாறு செல்லும் அனைத்து பஸ்களும் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்