கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் 5 வயது மகளை கிணற்றில் வீசிக்கொன்ற கொடூர தாய்

கள்ளக்காதலை காட்டிக்கொடுப்பாள் எனக்கருதி 5 வயது மகளை கிணற்றில் வீசி தாயே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-23 01:48 GMT

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலகநாதபுரத்தை சேர்ந்த தம்பதி சமயமுத்து- மலர்ச்செல்வி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு சிறுமியும், கார்த்திகா (5) என்ற மகளும் இருந்தனர். சமயமுத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சமயமுத்துவின் இளைய மகள் கார்த்திகா மர்மமான முறையில் மாயமானாள். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடினர். சிறுமியின் தாய் மலர்ச்செல்வியும் அழுதபடியே தேடி உள்ளார். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக மலர்ச்செல்வி, மேலூர் போலீஸ் நிலையத்தில், தனது இளைய மகள் கார்த்திகாவை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.இதுதொடர்பாக மலர்ச்செல்வியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது மகளை கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உலகநாதபுரத்தை சேர்ந்த தர்மசுந்தர் (33) என்பவருக்கும், மலர்ச்செல்விக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததை சிறுமி கார்த்திகா பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே தாயின் கள்ளத்தொடர்பு குறித்து சிறுமி கார்த்திகா வெளியே சொல்லிவிடுவாள் என கருதி மகளை அங்குள்ள ஒரு கிணற்றில் வீசி கொலை செய்ததாகவும், இதற்கு தர்மசுந்தர் உடந்தையாக இருந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து மேலூர் தீயணைப்பு படையினரை வரவழைத்த போலீசார், அந்த கிணற்றில் இருந்து சிறுமி கார்த்திகாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மகளை கொலை செய்த கொடூர தாய் மலர்ச்செல்வியையும் அவருடைய கள்ளக்காதலன் தர்மசுந்தரையும் கைது செய்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் தர்மசுந்தருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்