அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை - கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ததால் விரக்தி
வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்து ‘சீல்’ வைத்ததால் விரக்தி அடைந்த தொழில் அதிபர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை கொரட்டூர், சிவசக்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 54). தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
பாலகிருஷ்ணன், தனியார் வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அந்த கடனுக்காக அவரது வீட்டை நேற்று முன்தினம் வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்து 'சீல்' வைத்தனர்.
இதனால் பாலகிருஷ்ணன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் ஆன்மிகவாதியான பாலகிருஷ்ணன் தனது வீட்டில் இருந்த ஏராளமான சாமி படங்களை 2 கட்டை பையில் எடுத்துக்கொண்டு தனது நண்பருடன் பட்டினப்பாக்கம் சென்று கடலில் கரைத்தார்.
அதன்பிறகு நண்பர்களிடம் பேசிவிட்டு, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்று நேற்று முன்தினம் இரவு தங்கினார்.
நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அவரது அலுவலக கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பாலகிருஷ்ணன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், தற்கொலை செய்த பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.