ராயக்கோட்டை அருகேபெண்கள் உள்பட 10 கொத்தடிமைகள் மீட்பு4 பேர் மீது வழக்கு

Update: 2023-04-21 19:00 GMT

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளி பகுதியில் நெடுஞ்சாலை பணிகளுக்காக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தகரத்தால் ஆன கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டு விருப்பத்திற்கு மாறாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் உடையாண்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் அங்கு அதிரடியாக சென்று தேசிய நெடுஞ்சாலை பணிகளில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், கல் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்ததும், அவர்கள் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பெண்கள் உள்பட 10 பேரை அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் விசாரணை நடத்தி கொத்தடிமைகளாக தொழிலாளர்களாக பணிக்கு அமர்த்திய தெலுங்கானா மாநிலம் வானபருதி மாவட்டம் எத்லா கிராமத்தை சேர்ந்த சீனிவாசன், கங்காதரன், ஷிதுளு மற்றும் தொழிலாளர்களை அழைத்து வந்த பொறுப்பாளர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரப்பா (58) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது கொத்தடிமைகள் தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்