திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;
திருப்பூர்,
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த ஒருமாதமாக நடந்தது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களுக்கான வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று வாக்காளர்களிடம் வழங்கினர்.
அந்த கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து திரும்பப்பெற்றும் வருகின்றனர். அந்த படிவங்களை ஒப்படைப்பதற்கான காலக்கெடு 2 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கேயே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து வைத்திருந்தனர்.
அத்தகைய வாக்காளர்களில் பலரும் தற்போது இடம்பெயர்ந்து (சொந்தமாநிலம், மாவட்டங்களுக்கு) சென்றுவிட்டனர். இதனால் அவர்களில் பலரை கண்டறிந்து படிவங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரட்டை வாக்காளர்களாகவும் பலர் உள்ளனர்.
எனவே இந்த திருத்தப்பணியின்போது அவர்களது பெயர் நீக்கப்படும் நிலை உள்ளது. அதாவது சுமார் 5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டத்தில்தான் அதிக வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற 19-ந்தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்போது எவ்வளவு வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இதுதொடர்பாக கலெக்டர் மனிஷ் நாராணவரே கூறும்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. வருகிற 19-ந்தேதி இதுகுறித்த முழுவிவரங்களும் தெரிவிக்கப்படும் என்றார்.