நடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல் - ஒருவர் உயிரிழப்பு

இந்த சம்பவத்தால் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராம பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-02-26 05:27 GMT

நாகை,

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்தோசுக்கு சொந்தமான பைபர் படகில் சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த கோகிலா செல்விக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அங்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, பைபர் படகின் மீன்பிடி வலை சேதமடைந்துள்ளது.

இதனால் இரண்டு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மோதல் அதிகரிக்க, தகராறில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சிவனேசெல்வம் என்ற மீனவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் கடலுக்குள் மூழ்கிய காலஸ்திநாதன் என்பவர் மாயமானார். மேலும் இடது கையில் முறிவு ஏற்பட்டு ஆத்மநாபன் என்பவர் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு குழுவினரிடையே ஏற்பட்ட மோதலில் பைபர் படகு சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசைப்படகில் இருந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் கிராம பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்