பெற்றோர் கண் எதிரே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி - கார் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்டபோது பரிதாபம்

கார் கண்ணாடியை உடைத்ததை தட்டிக்கேட்டபோது டிரைவர் லாரியை முன்னோக்கி இயக்கியதால் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2022-10-04 03:50 GMT

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கம், வேல் நகர் பகுதியை சேர்ந்தவர் நேதாஜி. இவருடைய மகன் மோகன்ராஜ் (வயது 22). இவர், நசரத்பேட்டையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.

மோகன்ராஜ், நேற்று தனது குடும்பத்துடன் காரில் வேலூர் நோக்கி சென்றார். நந்தம்பாக்கம் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, இவரது காரின் வலது பக்க கண்ணாடியை உடைத்து விட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், காரை வேகமாக ஓட்டிச்சென்று புதுப்பேடு அருகே லாரியை மடக்கி நிறுத்தினார். பின்னர் தனது கார் கண்ணாடியை உடைத்தது குறித்து டிரைவரிடம் தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

உடனே மோகன்ராஜ், லாரியில் ஏறி டிரைவரை அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது லாரி டிரைவர் திடீரென லாரியை முன்னோக்கி இயக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மோகன்ராஜ் மீது லாரியின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய மோகன்ராஜ், தனது பெற்றோர் கண் எதிரேயே அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

மோகன்ராஜ் உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மோகன்ராஜின் உறவினர்கள், லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மோகன்ராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் கார்த்திகேயன் (38) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்