அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு ..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கும் உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2023-07-01 06:25 GMT

கோப்புப்படம்

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தொடர்ந்து அவரது காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாக அவரது மனைவி மேகலா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத மந்திரியாக நீடித்து வருகிறார். செந்தில் பாலாஜியிடம் இருந்த அமைச்சர் பொறுப்புகள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஒப்புக்கொள்ளவில்லை. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி கடிதம் மூலம் கூறி இருந்தார். ஆனால் அதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை. இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று திடீரென அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார்.

செந்தில் பாலாஜியை திடீரென அமைச்சரவையில் இருந்து கவர்னர் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கவர்னர் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்ட நிபுணர்களில் பெரும்பாலானவர்கள் கவர்னர் ஆர்.என்.ரவியின் முடிவுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்தசூழலில் கவர்னர் ஆர்.ர்ன். ரவி தனது உத்தரவை திரும்ப பெற முடிவு செய்தார். இதன்படி அவர் மீண்டும் ஒரு கடிதத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில், "செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய எனது கடிதத்தை பார்த்து இருப்பீர்கள். இது தொடர்பாக மத்திய உள்மந்திரி என்னை தொடர்பு கொண்டு சில அறிவுறுத்தல்களை தெரிவித்தார். அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) மூலம் இந்த விவகாரத்தில் கருத்துக்களை பெறும்படியும் என்னிடம் தெரிவித்தார். அதன்படி நான் அட்டர்னி ஜெனரலை நாடி உள்ளேன். அவரிடம் அமைச்சர் நீக்கம் குறித்து கருத்து கேட்டு உள்ளேன். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் எனது முடிவை அடுத்த உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் கவர்னர் ஆர். என். ரவி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கும் உத்தரவை கவர்னர் நிறுத்தி வைத்ததற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அரசியல் சாசனத்தின்படி எடுத்த முடிவை கவர்னர் மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும் கவர்னர் தனது முடிவு குறித்து ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்