சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-09 02:43 GMT

சென்னை,

2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.

இதையடுத்து, ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் டைரக்டர் அமீர் இயக்கத்தில் வெளியான இறைவன் மிகப்பெரியவன் என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார்.

டைரக்டர் அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இருவரும் இணைந்து காபி ஷாப் ஒன்றை தொடங்கியதாகவும் தகவல் வெளியாகின. இதையடுத்து, டைரக்டர் அமீருக்கு நோட்டீஸ் அனுப்பிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணைக்கு 2ம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த நோட்டீசையடுத்து, டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் நேரில் ஆஜரானார். பல மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைக்கு பின் டைரக்டர் அமீர் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, தி.நகரில் உள்ள டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தில் ஷேக் முகமது நாசார் என்பவரின் வீடு, நீலாங்கரையில் உள்ள புகாரி ஓட்டல் நிறுவன உரிமையாளரின் வீடு, கொடூங்கையூர் உள்பட பலரது வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்