பாஜகவின் மத, வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை; டாக்டர் சரவணன்

பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-13 21:17 GMT

மதுரை,

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் பூத உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் நேற்று இரவு 11 மணியளவில் அமைச்சர் பிடிஆர் வீட்டிற்கு நேரில் சென்று மன்னிப்பு கோரினார்.

இதனை தொடர்ந்து பிடிஆர்-ஐ சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சுயமரியாதை இயக்கத்தில் இருந்து எனது தந்தை என மொத்த குடும்பமே திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தான் நான் பாஜகவுக்கு வந்தேன்.

பாஜகவில் எப்போழுதுமே சிறுபான்மைக்கு எதிரான போக்கு நடந்துகொண்டே உள்ளது. அந்த மன உளைச்சலுடன் தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

பாஜகவில் நான் உறுதியாக தொடரமாட்டேன். பாஜகவின் மத அரசியல், வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நான் இங்கு வந்தேன். எனக்கு வெறுப்பு, மத அரசியல் ஒத்துவரவில்லை என என் மனதில் உள்ளதை அமைச்சரிடம் கொட்டிவிட்டேன்.

பாஜகவில் நான் தொடரவில்லை. பாஜகவில் நான் தொடரப்போவதுமில்லை. காலை (இன்று) ராஜினாமா கடிதத்தை எழுதிவிடுவேன். சுயமரியாதையாக இருக்கவேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்