வக்கீல்கள் போராட்டம்
3 குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.;
விழுப்புரம்
இந்திய தண்டனை சட்டம்(ஐ.பி.சி.) 1860-ஐ மாற்றம் செய்ய பாரதீய நியாய சம்ஹிதா (பி.என்.எஸ்.) என்ற மசோதாவையும், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.ஏ.) 1898-ஐ மாற்றம் செய்ய பாரதீய நாகரிக் கரக்ஷா சம்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்ற மசோதாவையும், இந்திய ஆதார சட்டம் 1872-ஐ மாற்றம் செய்ய பாரதீய சாக்ஷிய(பி.எஸ்) என்ற மசோதாவையும் மத்திய அரசு அறிமுகம் செய்து அதனை மக்களவையில் தாக்கல் செய்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வக்கீல்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிரிமினல் கோர்ட்டு பார் அசோசியேசன் தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர்கள் தயானந்தம், பன்னீர்செல்வம், நீலமேகவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் தமிழ்செல்வன், சங்கரன், ராம்பிரகாஷ், லெனின் விஜய், பாண்டியராஜன், ஜெமினிராஜன், குடியரசன், கந்தன், அகத்தியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோஷம் எழுப்பியபடி நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.