பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டம்

பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நர்சுகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-26 03:08 GMT

ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஒப்பந்த நர்சுகளுக்கு தமிழ்நாடு அரசு பணி ஆணை வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி எம்.ஆர்.பி. ஒப்பந்த நர்சுகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். 7 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டிருந்த நிலையில், 3 நாட்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு எம்.ஆர்.பி. ஒப்பந்த நர்சுகள் சங்க மாநில தலைவி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் உதயக்குமார், பொருளாளர் தேவிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கைக்குழந்தைகளுடன் நர்சுகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நர்சுகள் சங்கத்தின் மாநில தலைவி விஜயலட்சுமி, நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2022 டிசம்பர் மாதம் 31-ந்தேதி கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஒப்பந்த நர்சுகள் தமிழக அரசு பணிநீக்கம் செய்து, அரசு தரப்பில் பிற மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதுவரை அத்தகைய பணிகள் எதும் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து கோர்ட்டில் கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி பாதிக்கப்பட்ட நர்சுகளுக்கு தமிழக அரசு உரிய பணி நியமன ஆணை 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்