பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-12-21 18:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கீரனூர் அருகே வாழமங்கலம் கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தை சேர்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் கீரனூர் முருக பிரசாத் தரப்பினர் கள ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ''வாழமங்கலம் கிராமத்தின் மேற்கே, அடர்ந்த புதருக்குள், செக்கடி கொல்லை என்ற இடத்தில், மண்ணில் புதைந்த நிலையில் அய்யனார் சிலை 3½ அடி உயரமும், 2½ அடி அகலத்துடனும், இடது காலை மடக்கி, அதன்மேல் மேல் இடக்கையினை வைத்த வண்ணத்துடனும், வலது காலை தொங்கவிட்டு அதன்மீது வலது கையினை வைத்த வண்ணத்துடன் கம்பீரமாக, புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கிறது. சிலையின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது பல்லவர் கால கலைப்பாணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மிகப் பழமையான சிலை என்பதால் முகப்பகுதி சேதம் அடைந்தும் காணப்படுகிறது. பரந்து விரிந்த சடையுடன், இரு காதுகளிலும் பத்ர குண்டலத்துடனும், கழுத்தில் கண்டிகை சவடி அணிகலன்களுடன் முப்புரி நூலுடன், கைகளில் கைவளை அணிந்து, கைகளில் ஆயுதமேதும் ஏந்தாமல் வெறுமனே காட்சியளிக்கிறார். இடுப்பில் குறுவாளுடனும், இடுப்பிலிருந்து கால்களுக்கு யோக பட்டை அணிந்துள்ள இந்த பழமையான அய்யனார் சிலையை மீட்டெடுத்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்க வேண்டும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்