கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் வரவேற்பு

ஒரு மாதத்தில் வந்தே பாரத் ரெயிலில் 55 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.;

Update:2025-12-11 01:59 IST

கோவை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதி தொடங்கிவைத்தார். இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது ஒரு மாதத்தில் இந்த வந்தே பாரத் ரெயிலில் 55 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இருமார்க்கமாகவும் இந்த ரெயிலில் பயணிக்க முன்பதிவு 100 சதவீதத்தை தாண்டியுள்ளது.

பெங்களூரு- எர்ணாகுளம் வழித்தடத்தில் 11,447 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் சராசரி முன்பதிவு விகிதம் 127 சதவீதம் என கூறப்படுகிறது. (100 சதவீதம் இருக்கைகள் முன்பதிவு செய்த பிறகு 27 பேர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், அதன் அடிப்படையில் இந்த சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.) இந்த மாதம் இந்த வழித்தடத்தில் 16,129 பயணிகள் அதில் பயணித்துள்ளனர். எர்ணாகுளம்-பெங்களூரு வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரெயிலில் நவம்பர் மாதம் 12,786 பயணிகளும், சராசரி முன்பதிவு 117 சதவீதமாகவும், இந்த மாதம் 14,742 பேரும், சராசரி முன்பதிவு 141 சதவீதம் என்றும் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை, சபரிமலை சீசன் ஆகியவற்றால் பெங்களூரு-எர்ணாகுளம் வந்தே பாரத் ரெயிலில் பயணிகள் கூட்டம் இந்த மாதம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்