லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!

Update: 2024-01-02 02:37 GMT
Live Updates - Page 2
2024-01-02 05:16 GMT

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு...!

திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பட்டம் வாங்கிய மாணவ, மாணவியருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

2024-01-02 05:01 GMT

பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு...!

பிரதமர் மோடி திருச்சி வந்தடைந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு காரில் செல்கிறார். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி காரில் செல்கிறார். செல்லும் வழியில் சாலையில் இருபுறமும் கூடியுள்ள பாஜகவினர் மலர்தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

2024-01-02 04:37 GMT

பிரதமர் மோடி திருச்சி வருகை - கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்பு

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா உள்பட அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

2024-01-02 03:55 GMT

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சி வந்தடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி இன்று திருச்சி வர உள்ளார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தை திறந்து வைக்கிறார். மேலும், அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என். ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தடைந்தார். சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் முதல்-அமைச்சர் திருச்சி சென்றடைந்தார். திருச்சி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்க உள்ளார்.

2024-01-02 03:25 GMT

தமிழ்நாட்டு மக்கள் மீது அபரிமிதமான அன்பு வைத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி - கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

புனித பூமியான திருச்சிராப்பள்ளிக்கு வருகை தரும் நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை நெஞ்சார வரவேற்கிறோம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். விமானம், ரெயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைப்பார்.

தமிழ்நாட்டில் 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தையும், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி ஆலையையும் (டிஎப்ஆர்பி) அவர் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் மீதான அபரிமிதமான அன்பு மற்றும் பாசத்துக்காகவும், மாநிலத்தின் நலன் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

2024-01-02 03:02 GMT

பலத்த பாதுகாப்பு:

பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருச்சி பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி வர உள்ளதால் டி.வி.எஸ். டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2024-01-02 02:38 GMT

பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை:

பிரதமர் மோடி இன்று திருச்சி வர உள்ளார். தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா:

திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி பின்னர் கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

திருச்சி புதிய விமான நிலைய முனையம் திறப்பு:

பயணிகளுக்கான வசதியை மேம்படுத்துவதற்காக திருச்சி விமான நிலையத்தை ரூ.1,200 கோடியில் மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. இந்த புதிய விமான முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய விமான முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ரூ. 19 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள்:

ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கியும் வைக்கிறார்.

கவர்னர், முதல்-அமைச்சர் பங்கேற்பு:

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் திருச்சி புதிய விமான நிலைய முனையம் திறப்பு, புதிய திட்டப்பணிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என். ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்