லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!


தினத்தந்தி 2 Jan 2024 2:37 AM GMT (Updated: 2 Jan 2024 1:35 PM GMT)

அழகிய தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.

திருச்சி,

Live Updates

  • லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் - பிரதமர் மோடி
    2 Jan 2024 11:46 AM GMT

    லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் - பிரதமர் மோடி

    திருச்சி பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றடைந்தார். அங்கு நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து அவர் உரையாற்றியதாவது:-

    லட்சத்தீவு பல வரலாற்று நிகழ்வுகளை சுமந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக லட்சத்தீவுகளின் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

    கப்பல் போக்குவரத்து இந்த இடத்தின் உயிர்நாடியாக இருந்தாலும் இங்குள்ள துறைமுக உள்கட்டமைப்பு பலவீனமாகவே உள்ளது.

    சுகாதாரம், கல்வி, பெட்ரோல், டீசல் என பல பிரச்சினைகளை இங்குள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த சவால்களை எல்லாம் நம் அரசு இப்போது எதிர்கொள்கிறது. பல துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கி வருகின்றன. லட்சத்தீவின் வளர்ச்சிக்கு இந்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்றார்.

  • 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு செலவு செய்துள்ளோம் - பிரதமர் மோடி
    2 Jan 2024 9:36 AM GMT

    3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு செலவு செய்துள்ளோம் - பிரதமர் மோடி

    முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செலவு செய்துள்ளது. 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் நிதியை செலவு செய்து வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

  • 2 Jan 2024 7:55 AM GMT

    எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் உள்ளனர் - பிரதமர் மோடி பெருமிதம்

    தமிழ்நாட்டிற்கு ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் குடும்பமே... துடிப்பான தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டால் இந்தியா பெருமைபடுகிறது. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் உள்ளனர். தமிழ் கலாச்சாரம் குறித்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் எங்கு சென்றாலும் தமிழ்நாடு குறித்து என்னால் பேசாமல் இருக்கமுடியவில்லை. நாட்டிற்கு தமிழ் பண்பாடு கொடுத்த நல்லாட்சி முறையை உத்வேகமாக கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டுள்ளது’ என்றார்.

  • 2 Jan 2024 7:30 AM GMT

    சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்: புகழாரம் சூட்டிய பிரதமர்

    திருச்சியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். ‘சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்’ என புகழாரம் சூட்டினார். அனைத்தையும் விட தேசத்தை விஜயகாந்த் அதிகம் நேசித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

  • 2 Jan 2024 7:27 AM GMT

    தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!

    ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டப்பணிகளின் விவரம் வருமாறு:-

    * திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்.ஐ.டி.) மத்திய அரசு நிதியில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் 253 அறைகளுடன் 4 மாடியில் கட்டப்பட்ட 506 மாணவர்கள் தங்குவதற்கான விடுதியை திறந்து வைத்தார். மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செங்கல்பட்டு முதல் எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி வரை 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா-தர்மபுரி 'மல்டி புராடக்ட்' பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகிய இரு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    * ரூ.9 ஆயிரம் கோடியில் முடிவுற்ற இந்த திட்டங்களையும், கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    * சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப்பிரிவில் 41.4 கிலோமீட்டர் இரட்டை ரெயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரெயில்பாதை திட்டம், திருச்சி - மானாமதுரை - விருதுநகர் ரெயில்பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - நெல்லை - திருச்செந்தூர் ரெயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    * இதேபோல் தேசிய நெடுஞ்சாலை 81-ன் திருச்சி-கல்லகம் பிரிவில் 39 கிலோ மீட்டர் நான்குவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-ன் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் செட்டிக்குளம் - நத்தம் பிரிவின் 29 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-ன் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கிலோ மீட்டர் இருவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம்-திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையின் 44 கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்குவழிச்சாலை ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    * இந்த சாலை திட்டங்கள் திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேசுவரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்த உதவும்.

    *காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக்கப்பல் தங்குமிடம் 2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி-இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்க தூர்வாரும் கட்டம்-5) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    * இதேபோல் இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி - கூத்தநாடு - பெங்களூரு - மங்களூரு எரிவாயுக்குழாய் - 2 திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டங்களுக்கும், சென்னை வல்லூரில் தரைவழி முனையத்துக்கான பொதுவழித்தடத்தில் 'மல்டி புராடக்ட்' குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

    * தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். இந்த சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் உலக பாரம்பரிய தலமான மாமல்லபுரத்துக்கு இந்த திட்டம் சாலை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை இது வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 2 Jan 2024 6:50 AM GMT

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...!

    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் எல்.முருகன், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அமைச்சர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • 2 Jan 2024 6:31 AM GMT

    பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நிறைவு செய்த பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

  • 2 Jan 2024 6:08 AM GMT

    அழகிய தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது - பிரதமர் மோடி

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

    பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    வணக்கம், எனது மாணவ குடும்பமே... இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது. இளைஞர்களுடன் மற்றும் அழகிய மாநிலமான தமிழ்நாட்டில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின. பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வரும் முதல் பிரதமர் என்பதில் நான் பெருமைகொள்கிறேன்.

    20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைக்கழகங்களை தொடங்கினர். பல்கலைக்கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சியடையும். கல்வி என்பது அறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும். மொழியையும், வரலாற்றையும் படிக்கும்போது கலாசாரம் வலுப்படும். புதியதோர் உலகுசெய்வோம் என்ற பாரதிதாசனின் கூற்றுப்படி 2047-ஐ நோக்கி பயணிப்போம். இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உலகுக்கு பறைசாற்றுகிறார்கள்’ என்றார்.

  • 2 Jan 2024 5:44 AM GMT

    மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்த பிரதமர் மோடி...!

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

  • 2 Jan 2024 5:18 AM GMT

    மாணவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட பிரதமர் மோடி..!

    திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் பட்டங்கள் பெறும் மாணவர்களுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார்.


Next Story