பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் - ஐகோர்ட்டு தீர்ப்பு

ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-03 00:27 GMT

சென்னை,

கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கள் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம். ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை. ஆனால், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று உத்தரவிட்டனர். மேலும், நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற அரசின் விதியை ரத்து செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்