காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்கு விரட்டாமல் அலட்சியமாக இருப்பதா? தமிழக அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

நீலகிரியில் யானை தாக்கி பலர் உயிரிழக்கும் நிலையில் தமிழக அரசுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-09 13:27 GMT

கோப்புப்படம்

சென்னை:

நீலகிரியில் யானை தாக்கி பலர் உயிரிழக்கும் நிலையில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஆரோட்டு பாறை செல்வபுரத்தை சேர்ந்த விவசாயி நாதன் என்பவர், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 பேர் காட்டு யானை தாக்கி பலியாகியுள்ளனர்.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலத்துக்குள் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் உலா வருகின்றன. கிராம மக்களின் உடமைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் வசித்து வருவதோடு, காட்டு யானை தாக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது.

காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டாமல் தமிழக அரசு அலட்சிய போக்குடன் செயல்படுகிறது. அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் வனத்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்