உலகின் முதல் மீத்தேன்-திரவ ஆக்சிஜன் எரிபொருள் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா
மீத்தேன்-திரவ ஆக்சிஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.;
Image Courtesy : @XHscitech twitter
பெய்ஜிங்,
சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு வானில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்நிறுவனம், குறைந்தளவே மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு ஏவுகணை வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்தியுள்ளது. இதன் மூலம், மீத்தேன் வாயுவை எரிபொருளாக கொண்டு செலுத்தப்படும் விண்வெளி வாகனங்களை உருவாக்கும் போட்டியில் அமெரிக்காவின் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஜோஸின் நிறுவனமான புளூ ஆரிஜின் நிறுவனம் ஆகியவற்றை சீனா முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.