வெற்றியை தரும் சரபசூலினி

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் பிளாஞ்சேரி என்ற திருத்தலம் உள்ளது.

Update: 2017-05-30 09:04 GMT
கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் பிளாஞ்சேரி என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள கயிலாசநாதர் ஆலயத்தில், கயிலாசநாதரும், காமாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். மேலும் இந்தக் கோவிலில் அஷ்ட பைரவர்களுடன், சரபசூலினி அம்மனும் வீற்றிருக்கிறார்.

ஊழி காலத்தில் பிரளயம் ஏற்பட்டு, உலக உயிரினங்கள் அரியும் நிலை உருவானது. இதை உணர்ந்த பிரம்மதேவர், சப்த ரிஷிகளை அழைத்து, உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, சிவபெருமானை நோக்கி தவம் இருக்கும்படி கூறினார். அவர்களும் பிரம்ம தேவரின் ஆணையை ஏற்று தவம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆத்ரேய மகரிஷி என்பவரின் மகனான பிராச மகரிஷி, பிரம்மதேவரிடம் ‘நானும் சப்த ரிஷிகளோடு இணைந்து தவத்தில் ஈடுபடட்டுமா?’ என்று கேட்டார்.

அதற்கு பிரம்மதேவர், ‘உன்னுடைய கர்மவினைகள் இன்னும் தீரவில்லை. ஆகையால் தவம் இருக்கும் முயற்சியை நீ செய்ய வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.

இதையடுத்து பிராச மகரிஷி, இந்தத் தலம் வந்து கயிலாச நாதரையும், காமாட்சி அம்மனையும் வழிபட்டு தவம் மேற்கெண்டார். அவரது தவத்தால் மகிழ்ந்த கயிலாசநாதர் அசரீரியாக தோன்றி, ‘உனது கர்மவினைகள் அகல, நீ சரபசூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து 1,008 பவுர்ணமி நாட்களில் ஜெயமங்களா மகா யாகத்தை நடத்தி, சரபசூலினியை வேண்டினால், அவளது அருளால் உன்னுடைய கர்மவினை அகலும். மேலும் உன்னுடைய தவப் பயனால், உலகம் அழிவில் இருந்து காப்பாற்றப்படும்’ என்றார். பிராச மகரிஷியும் அவ்வாறே செய்து பலன் பெற்றார்.

பிராச மகரிஷி வழிபட்டதால், இந்தத் தலம் பிராசவனஞ்சேரி என்று அழைக்கப்பட்டது. இத்தல இறைவன், இறைவியை வழிபட்டால் பித்ரு தோஷம், திருமண தோஷம், புத்திர தோஷம் நீங்கும். பதவி உயர்வு, வழக்குகளில் வெற்றி வந்து சேரும்.

இந்த ஆலயத்தில் மட்டுமே பிராச மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 18 திருக்கரங்களோடு சிம்ம வாகனத்தில் அருள்புரியும் சரபசூலினி அம்மன் இருக்கிறார். இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மாலை 5 மணிக்கு ஜெயமங்களா யாகம் நடைபெறுகிறது.

விஷக்கடி நீக்கும் வேர்


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது பூவனூர் திருத்தலம். இங்கு சதுரங்கவல்லப நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. அதற்கு அடுத்தாற்போல், தமிழ்நாட்டில் இந்த ஆலயத்தில் மட்டும் தான் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனிச் சன்னிதி இருப்பது விசேஷமாகும். இந்த அம்மனை வழிபட்டால் விஷக்கடிகள் குணமாகி விடும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாக உள்ளது. எலிக்கடி, விஷப் பூச்சி கடிகளுக்கு இந்த ஆலயத்தில் தரும் வேரை கட்டிக் கொண்டால், விஷம் இறங்கி விடுவதாக கூறுகிறார்கள். விஷக் கடி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதி முன்பாக உள்ள சூலத்தின் எதிரே நின்று தங்கள் கையில் வேர் கட்டிக் கொண்டால், விரைவில் நோய் குணமாவது அதிசயமாக உள்ளது.

பூவை விழுங்கும் விநாயகர்

ஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் திருத்தலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னிதியில் வலது புறம் சிறிய வடிவிலான விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.

இந்த விநாயகருக்கு நந்தியாவட்டை மலரின் காம்பை கிள்ளிவிட்டு, நமக்கு நடக்க வேண்டிய காரியங்களை மனதில் நினைத்துக் கொண்டு, விநாயகரின் இரு காதுகளிலும் மலரை வைக்க வேண்டும். நினைத்த காரியம் உடனடியாக நடக்கும் என்றால், பூ வைத்த உடனேயே காது துளை வழியாக உள்ளே சென்று விடும். தாமதாக சென்றால் நினைத்த காரியம் தாமதப்படும். பூ உள்ளே செல்லாவிட்டால் காரியம் நடைபெறாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பூவை விழுங்கி, பக்தர்களுக்கு நல்வழி காட்டுவதால், இவரை பக்தர்கள் ‘பூ விழுங்கி விநாயகர்’ என்கிறார்கள்.

வாஸ்து தோஷம் நீக்கும் அனுமன்

தஞ்சாவூர் மேலவீதியும், வடக்கு ராஜவீதியும் இணையும் வடமேற்கு மூலையில், பிரதாப வீர அனுமன் கோவில் இருக்கிறது. வாயு மூலையில் அமைந்த ஆலயம் என்பதால், இங்கு வீற்றிருக்கும் ஆஞ்ச நேயரை ‘மூலை அனுமன்’ என்று அழைக்கிறார்கள். தஞ்சாவூர் பெரியக் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மூலை அனுமன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வாயு மூலையில் அமைந்த ஆலயம் என்பதால், வாஸ்து தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மேலும் செய்திகள்