ஆன்மிகம்
கன்னியரின் தோ‌ஷம் நீக்கும் இறைவன்

சிவபெருமானிடம் சாபம் பெற்று, பசுவாக உருவெடுத்து பூலோகம் வந்தாள் பார்வதி தேவி.
சிவபெருமானிடம் சாபம் பெற்று, பசுவாக உருவெடுத்து பூலோகம் வந்தாள் பார்வதி தேவி. சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் பாலைப் பொழியும் போது, பசுவின் பால் இறைவனின் மேல் பட்டு பாவ விமோசனம் பெற்றாள் பார்வதி.

சிவபெருமான்– பார்வதி திருக்கல்யாணம் பந்தணைநல்லூரில் நடைபெறுவதென முடிவாயிற்று. அந்தப் பெருமணத்திற்கு கயிலையில் இருந்து அனைத்து தேவாதி தேவர்களும் பந்தணைநல்லூருக்கு வரத்தொடங்கினர்.

ஸ்ரீ பசுபதீஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண வந்த அக்னி தேவன், சிவபெருமானை பூஜை செய்ய விரும்பினான். இதற்காக பந்தணை நல்லூருக்கு அக்னி திக்கில், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். தினம் தினம் அந்த இறைவனை பூஜித்து வணங்கினான்.

அந்த தலம் ஸ்ரீ ரங்கராஜபுரம்

தல வரலாறு

இத்தலத்திற்கு இப்பெயரை சூட்டியவர் மகாவிஷ்ணு.

ஆம்.. மண்ணியாற்றில் நீராடிவிட்டு, இத்தலத்து இறைவனை ஆராதிக்க வந்த மகாவிஷ்ணு, இத்தலத்துக்கு அரங்கராஜபுரம் என பெயர் சூட்டினார். அதுவே தற்போது   ஸ்ரீ ரங்கராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது

வனவாசத்தில் இருந்த பாண்டவர்களின் ஒருவராகிய பீமராஜன் காட்டில் நள்ளிரவில் இடும்பனைக் கொன்றார். அவரைப் பிரம்மஹத்தி தோ‌ஷம் பற்றியது. இத்தலம் வந்த பீமராஜன் இத்தலத்து இறைவனை ஆராதித்து தோ‌ஷம் நீங்கப் பெற்றார். தன்னை காத்து அருள் புரிந்த இத்தலத்து இறைவனை இடும்போஸ்வர சுவாமி என்று பீமன் அழைக்க, அந்தப் பெயரே இத்தலத்து இறைவனுக்கு நிலையாகிவிட்டது.

ஆலய அமைப்பு

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் இடும்பேஸ்வர சுவாமி. இறைவி பெயர் குசும குந்தலாம்பிகை. ஆலய முகப்பைக் கடந்ததும் விசாலமான பிரகாரம் உள்ளது. கொடிமரம், பீடம், நந்தி இவைகளைக் கடந்தால் மகாமண்டபம்.

மகா மண்டபத்தின் வலது புறம் இறைவியின் சன்னிதி உள்ளது. அன்னை நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் தென் முகம் நோக்கி புன்னகை தவழ காட்சி தரும் அழகே அழகு. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகர், வலது புறம் முருகன் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன.

அடுத்துள்ள கருவறையில் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும் இருக்கிறார்கள்.

பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், ஐயப்பன் ஆகியோரும், வடக்கு திசையில் சண்டிகேசுவரரும் தனித்தனி சன்னிதிகளில் அருள் பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் தனி மண்டபம் உள்ளது. கிழக்குப் பிரகாரத்தில் சூரியன், பைரவர், சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன.

ஆராதனைகள்

ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

இங்குள்ள அய்யப்பன் சன்னிதியில் கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று நூற்றுக் கணக்கான பேர் மாலை போட்டுக் கொண்டு மண்டல விரதத்தை இங்கு தொடங்குகின்றனர்.  இங்குள்ள இறைவன் அக்னி தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

எனவே, இங்கு கிழக்கு பிரகாரத்தில் உள்ள சூரியதேவன் மிகவும் சக்தி உள்ளவர் என பக்தர்கள் நம்புகின்றனர்.

வெப்பத்தால் வரும் நோய்கள் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்குவதில் இங்குள்ள சூரியபகவான் வல்லவர் எனக் கூறுகின்றனர். சூரிய தேவனை வணங்கி, ஒன்பது வாரங்கள் அவர் எதிரே அமர்ந்து, அவருக்கு அபிஷேகம் செய்து வந்தால் நோய்களின் கடுமை நீங்கி குணமாவது நிச்சயம் என்கின்றனர். பீமனின் பிரம்மஹத்தி தோ‌ஷத்தை நீக்கியவர் இத்தலத்து இறைவன் எனவே இத்தலம் தோ‌ஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.

ஜாதகத்தில் தோ‌ஷம் உள்ள கன்னிப் பெண்கள் இங்குள்ள இறைவன் இறைவியை ஆராதனை செய்தால் தோ‌ஷம் நீங்குவதுடன், அவர்களுக்கு விரைந்து திருமணமும் நடந்தேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

இந்த ஆலயத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு நவசண்டி மகாயாகம் நடைபெறுவதோடு அப்போது மக்கள் வெள்ளம் சூழ காட்சி தரும் இந்த ஆலயத்தைக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

நம்மை அறியாது நம்மைச் சூழ்ந்துள்ள தோ‌ஷங்கள் நீங்க நாமும் ஒரு முறை இத்தலம் சென்று வரலாமே!

திருப்பனந்தாள் – மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள பந்தநல்லூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீரங்கராஜபுரம் என்ற இத்தலம்.