காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோராட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-26 05:20 GMT

காஞ்சிபுரம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில் பெருமாளை ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு 'அத்திகிரி' என்றும் பெயரும் உண்டு. வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களாக 3-ம் நாள் கருட சேவை உற்சவமும், 7-ம் நாள் தேரோட்டமும், 9-ம் நாள் தீர்த்தவாரி உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் சிறப்பு மிக்க வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று காலை நடைப்பெற்றது. மேளங்கள் முழங்க, 'கோவிந்தா' கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வரதராஜ பெருமாள் 100 டன் எடையும் 63 அடி உயரமும் 30 அடி அகலமும் ஐந்து நிலைகளை உடைய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கொண்டை முடிச்சு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் வரதராஜ பெருமாள் அதிகாலையில் ஆலயத்தில் இருந்து தேருக்கு எழுந்தருளினர். தேரில் அமர்ந்திருக்கும் பெருமாளை பக்தர்கள் ஏறிச் சென்று பார்க்க காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தேரினை குறு மற்றும் சிறு தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

தேரோட்ட விழாவில் காஞ்சிபுரம் எம்.பி கா. செல்வம்,மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் செ. வெங்கடேஷ், அறநிலையத்துறை இணை ஆணையர் ரா. வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன், மக்கள் நீதி மையத்தின் மாநில செயலாளர் எஸ்.கே. பி. கோபிநாத் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தேர் வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அண்ணா தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் .பா.கணேசன் அ.தி.மு.க. மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராஜசேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கே.யு.சோமசுந்தரம், எஸ் எஸ். ஆர். சத்யா, எஸ்.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.

தேர் வரும் வழிநெடுகிலும் திரளான வணிக நிறுவனங்கள் நீர்,மோர் வழங்கியதுடன் அன்னதானமும் வழங்கினார்கள். தேரோட்டத்தை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தேர் திருவிழாவில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பொன்னி, எஸ். பி. கே சண்முகம் ஆகியோர் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வரதராஜர்

பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சீபுரத்தில் யாகம் செய்தார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டு விட்டு, மற்றவர்களான சாவித்திரி, காயத்திரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தைச் செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து, பாய்ந்தோடி வந்தாள். இதையடுத்து பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். வெள்ளப்பெருக்கு வரும் வழியில் மகாவிஷ்ணுவான பெருமாள் சயனித்து கிடந்தார். இதனால் அவரை தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை. இப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் பெருமாள் 'வரதராஜர்' என்று பெயர் பெற்றார்.

தங்க பல்லி, வெள்ளி பல்லி

ஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் 2 மகன்கள் கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒரு முறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர் அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சீபுரம் சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார்.

இதையடுத்து இவரும் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். இறைவன் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்க பெறுவார்கள் என்று அருளினார். அதன்படி இந்த கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.

அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம்

வரதராஜபெருமாள் கோவிலில் அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம் என 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும், 100 கால் மண்டபத்திற்கு வடக்கேயும் அனந்தசரஸ் திருக்குளம் இருக்கிறது. இந்த குளத்தில் விமானத்துடன் கூடிய நான்கு கால் நீராழி மண்டபத்தின் அடியில் தான் அத்தி வரதர் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். அத்தி வரதர் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டவர். முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர் இவர் திருக்குளத்தில் உள்ளே இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வந்து கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும், 18 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த அற்புதமான நிகழ்வு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்