உங்கள் முகவரி
சிக்கன செலவுக்கு ஏற்ற கட்டிட வடிவம்

கட்டுமான பணிகளில் மேற்கொள்ளப்படும் கட்டிட வடிவமைப்புகளை பொறுத்து அதற்கான செலவுகளை கச்சிதமாக கையாள முடியும் என்று கட்டிடவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கட்டுமான பணிகளில் மேற்கொள்ளப்படும் கட்டிட வடிவமைப்புகளை பொறுத்து அதற்கான செலவுகளை கச்சிதமாக கையாள முடியும் என்று கட்டிடவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். வழக்கமாக கையாளப்படும் வடிவங்களான சதுரம் அல்லது செவ்வகம் ஆகிய வடிவங்களை கொண்ட கட்டுமான அமைப்புகளை விடவும், வட்ட வடிவம் கொண்டவற்றின் கட்டிட பணிகளை சற்று குறைவான செலவில் செய்து முடிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  

வட்ட வடிவத்தின் சுற்றளவு

உதாரணமாக, 1600 சதுர அடி கொண்ட ஒரு மனையானது 20 அடி அகலம் மற்றும் 80 அடி நீளம் என்ற அளவுகளில் செவ்வகமாக இருக்கும் பட்சத்தில் அதன் சுற்றளவு 200 அடியாக இருக்கும். ஆனால், அந்த மனையானது 40 அடி அகலம் மற்றும் 40 அடி நீளம் என்ற கச்சிதமான முறையில் சதுரமாக இருக்கும் பட்சத்தில் அதன் சுற்றளவு 160 அடியாக இருக்கும். ஆனால், அதே பரப்பளவு கொண்ட வட்ட வடிவ மனையின் சுற்றளவு 141 அடியாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. 

கூடுதலான இடம்

மேலும், கட்டிடங்களை அமைக்கும்போது பொருத்தமான இடங்களில் வட்டம் மற்றும் அரைவட்டம் ஆகிய வடிவத்தில் சுவர்கள் உள்ளிட்ட இதர அமைப்புகளை கட்டும்போது அவற்றின் சுற்றளவு குறைவாக அமைவதோடு, இடமும் சற்று கூடுதலாக கிடைக்கும். குறிப்பாக, அவற்றின் சுற்றளவு குறையும் காரணத்தால் செங்கல் உள்ளிட்ட மற்ற மூலப்பொருட்களின் அளவும் குறைவாகத்தான் தேவைப்படும்.

காம்பவுண்டு சுவர்

மேலும், மனையை பாதுகாக்கும் காம்பவுண்டு சுவர் அல்லது பாதுகாப்பு வேலிகள் வட்டம் சார்ந்த வடிவத்தில் இருக்கும்போது, அதிக பரப்பளவில் சற்று குறைவான செலவில் செய்து முடிக்க இயலும்.

தண்ணீர் தொட்டி அமைப்பு

தொழில்நுட்ப ரீதியாக, தண்ணீர் தொட்டிகள் அமைப்பதில் வட்டம் என்பதே சிறந்த வடிவமாக உள்ளது. காரணம், நீரின் அழுத்தம் சுவர்களின் மூலை பகுதிகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், வட்ட வடிவத்தில் உள்ள சுவர்ப்பரப்பில் தண்ணீரின் அழுத்தமானது சமமான தாக்கத்தையே எல்லா பகுதிகளும் ஏற்படுத்தும். அதன் காரணமாக வட்ட வடிவ தண்ணீர் தொட்டிகள் எளிதாக பாதிக்கப்படுவதில்லை.

வட்ட வடிவ குளங்கள்

நமது முன்னோர்கள் வட்ட வடிவத்தின் சிறப்பியல்புகளான அமைப்பியல் எளிமை, சிக்கனம் மற்றும் வலிமை ஆகிய தன்மைகளை மனதில் கொண்டு ஊர்களின் மத்தியில் பெரும்பாலான குளங்களை வட்ட வடிவமாக அமைத்துள்ளதை பல இடங்களில் காண முடியும். 

ஆங்கிலேயர் காலத்தில் செவ்வகம் மற்றும் சதுர வடிவத்தில் கட்டப்பட்ட குளங்கள் பலமுறை உடைந்த நிலையில் பின்னர் அவை வட்ட வடிவமாக மாற்றி அமைக்கப்பட்ட செய்திகளும் அறியப்பட்டுள்ளது.