வீட்டுக்கடன் விண்ணப்பதாரர்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஆலோசனை

இன்றைய டிஜிட்டல் உலகில், மக்கள் மனை மற்றும் வீடுகள் குறித்த விவரங்களை இண்டர்நெட் மூலம் பார்த்து அறிகிறார்கள்.

Update: 2021-03-20 15:35 GMT
நிறுவனங்கள் அறிவித்துள்ள ஒர்க் பிரம் ஹோம் திட்டத்தின் அடிப்படையில் புதியதாக வீடு வாங்குபவர்கள் கூடுதலாக ஒரு படிப்பு அறை அல்லது அலுவலக அறை இருக்கவேண்டும் என்று கட்டுனர்களிடம் கேட்கிறார்கள். அரசு அளிக்கும் சலுகைகள், வங்கி கடனுக்கு குறைந்த வட்டி, பில்டர்கள் அளிக்கும் சலுகைகள் ஆகியவை வீடு வாங்கும் எண்ணத்தை பொதுமக்களிடையே உருவாக்கி வருகிறது. முதலீட்டு ரீதியாகவும் வீடு வாங்க இது நல்ல தருணம் என்ற நிதி முதலீட்டு கோணத்திலும் பலர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்போது, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், 16 ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கிடப்பட்ட அளவாக இருப்பதால், வங்கி கடன் மூலம் வீடு வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில், வங்கி கடன் பெற்று வீடு வாங்குபவர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

* வீடு கட்டுதல், தனி வீடு மற்றும் அடுக்கு மாடி வீடு வாங்க, வீட்டை விஸ்தரிக்க, புதுப்பிக்க, பழுதுபார்க்க ஆகியவற்றுக்கு வீட்டுக் கடன் பெறலாம். கடன் பெறுபவர்கள், நில உரிமை பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்று, இருப்பிடச் சான்று, கடந்த ஆறு மாத வங்கிக் கணக்கு விவரம், சென்ற மூன்று வருடங்களின் வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவம், படிவம் 16, வீட்டு மதிப்பீட்டு அறிக்கை, லீகல் ஒப்பினியன் ஆகியவற்றை அளிக்கவேண்டும்.

* வீட்டுக் கடன் என்பது, கடன் பெறுபவர் திருப்பிச் செலுத்தும் தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். குடும்ப வருமானம், சொத்து மற்றும் வருமானத்தின் நிரந்தரத்தன்மை ஆகிய நிலைகளிலும் கடன் தொகை தீர்மானிக்கப்படும்.

* வங்கிக் கடன் ஜாமீன் என்பது சொத்துப் பத்திரம் என்றாலும் கடன் தொகைக்கு ஈடான ஆயுள் காப்பீடு பாலிசி, ஜாமீன்தாரர், கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவையும் இணை ஜாமீனாக இருக்கலாம்.

* வீட்டுக் கடனுக்கான வட்டி மாற்றத்துக்கு உட்பட்டது என்பதால், வட்டி குறித்து வங்கியிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். பல ஆண்டுகள் வட்டி செலுத்த வேண்டும் என்ற நிலையில் ஒரு சதவிகித வட்டி குறைப்பு கூட லட்சக்கணக்கான ரூபாயை சேமிப்பாக மாற்றக்கூடும்.

* சொத்து மதிப்பில் 80 அல்லது 90 சதவீதம் மட்டும் வங்கி கடனாக தரப்படும் என்பதால் மீதித் தொகையை ஏற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், நடைமுறை கட்டணம், நிர்வாகச் செலவு, ஆவணப்படுத்தும் கட்டணம், தாமதக்கட்டணம், கடன் தவணையை மாற்றி அமைக்கும் கட்டணம், புதிய கடன் திட்டத்துக்கு மாறுவ தற்கான கட்டணம், சீரமைப்புக் கட்டணம், நிலையான வட்டியிலிருந்து மாறும் வட்டிக்கு மாறுவதற்கான கட்டணம், சட்ட ஆலோ சனை கட்டணம், தொழில்நுட்ப ஆய்வுக் கட்டணம், வருடாந்தர சேவைக் கட்டணம் உள்ளிட்டவற்றில் பேசி தள்ளுபடி செய்ய வங்கியை 
கேட்டுக்கொள்ளலாம்.

* கடன் பெறும் வாடிக்கையாளருக்கு, வட்டி விகிதம், கட்டணங்கள், செலவுகள் மற்றும் வட்டியை பாதிக்கும் அம்சங்கள் ஆகியவற்றை கடன் தகவல் படிவத்தில் வங்கி அதன் செலவில் தருவதுடன், கடன் சம்பந்தமான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவண நகல்கள் அனைத்தையும் வாடிக்கையாளருக்கு தர வேண்டும்.

* கடன் பத்திரத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக படித்து பார்த்து புரிந்து கொண்ட பின்னரே வாடிக்கையாளர் அதில் கையெழுத்து போடுவது நல்லது. கடன் பத்திரத்தில் உள்ள சரத்துக்களில் புரியாத வாசகம் இருந்தால் அதற்கான விளக்கத்தை வங்கியிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

மேலும் செய்திகள்