160 ரன்களுக்குள் அவர்களை சுருட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.. ஆனால் தோனி.. - கே.எல். ராகுல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றது.

Update: 2024-04-20 04:24 GMT

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்சும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும், இறுதி கட்டத்தில் களமிறங்கிய தோனி 9 பந்துகளில் 28 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக கே.எல் ராகுல் 82 ரன்களையும், குவிண்டன் டி காக் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின்போது அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறுகையில் :

"உண்மையிலேயே இந்த போட்டி முடிந்த விதம் குறித்து மகிழ்ச்சியாக நினைக்கிறேன். எப்போதுமே ஒரு வெற்றி நல்ல உணர்வை தரும். அந்த வகையில் நாங்கள் இந்த போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக வைத்து வெற்றி பெற்றுள்ளோம். இந்த மைதானத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் 160 ரன்களுக்குள் அவர்களை சுருட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் மகேந்திர சிங் தோனி பின் வரிசையில் களமிறங்கி எங்களது பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை கொடுத்து கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் வரை சி.எஸ்.கே. அணி குவிக்க காரணமாக அமைந்தார். பின்னர் மைதானத்தின் தன்மையை உணர்ந்து நாங்கள் சிறப்பான துவக்கத்தை அளித்தோம். சி.எஸ்.கே அணியின் ஸ்பின்னர்களும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இருந்தாலும் எங்களுடைய பேட்டிங்கில் நல்ல ஆட்டம் வெற்றியைத் தேடித் தந்தது. அடுத்ததாக சென்னை மைதானத்தில் அவர்களுடன் விளையாடப் போகும் போட்டி வித்தியாசமாக அமையும். அங்கேயும் எங்களது வெற்றியை தொடர விரும்புகிறோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்