ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: கர்நாடகா, பெங்கால், மத்திய பிரதேசம் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின

கர்நாடகா, பெங்கால், மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Update: 2023-02-03 21:33 GMT

பெங்களூரு,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 8 முறை சாம்பியன் கர்நாடகா-உத்தரகாண்ட் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் உத்தரகாண்ட் அணி 116 ரன்னில் சுருண்டது. கர்நாடக அணி 606 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் கோபால் 161 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 490 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து இருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய உத்தரகாண்ட் அணி 73.4 ஓவர்களில் 209 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கர்நாடக அணி இன்னிங்ஸ் மற்றும் 281 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

இந்தூரில் நடைபெற்ற நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்- ஆந்திரா அணிகள் இடையிலான கால்இறுதியில் முதல் இன்னிங்சில் ஆந்திரா 379 ரன்னும், மத்தியபிரதேசம் 228 ரன்னும் எடுத்தன. 151 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆந்திரா 93 ரன்னில் அடங்கியது.

இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்து இருந்தது. 4-வது நாளான நேற்று பேட்டிங் செய்த மத்தியபிரதேச அணி 77 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 245 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது.

கொல்கத்தாவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் பெங்கால்-ஜார்கண்ட் அணிகள் சந்தித்தன. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஜார்கண்ட் 173 ரன்னும், பெங்கால் 328 ரன்னும் எடுத்தன. 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜார்கண்ட் அணி 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து இருந்தது.

4-வது நாளில் விளையாடிய ஜார்கண்ட் 221 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 67 ரன்கள் இலக்கை பெங்கால் அணி 12.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதியை எட்டியது. 

Tags:    

மேலும் செய்திகள்