கொரோனா பாதிப்பு: ஹாக்கி இந்தியாவின் தேசிய தொழில்நுட்ப அதிகாரி உயிரிழப்பு

ஹாக்கி இந்தியா அமைப்பின் தேசிய தொழில்நுட்ப பிரிவு அதிகாரி கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழந்து உள்ளார்.

Update: 2021-06-03 10:06 GMT
புதுடெல்லி,

ஹாக்கி இந்தியா அமைப்பின் தேசிய தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக இருந்தவர் ரப்பி ரோஷன் (வயது 44).  கடந்த 2010ம் ஆண்டு முதல் எண்ணற்ற உள்ளூர் போட்டிகளில் தொழில்நுட்ப அதிகாரியாக அவர் பணியாற்றி வந்துள்ளார்.

அவற்றில், உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர் நகரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த மகாராஜா சர் பி.பி. சிங் பரிசு தொகைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி, கேரளாவின் கொல்லம் நகரில் நடந்த 10வது ஹாக்கி இந்தியா சீனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் 2020 போட்டி, தமிழ்நாட்டின் சென்னையில் நடந்த 10வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆடவர் தேசிய சாம்பியன்ஷிப் 2020 போட்டி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கன ஆகும்.

இதுபோன்று பல போட்டிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.  கடைசியாக சமீபத்தில் நடந்து முடிந்த, ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கடந்த மார்ச் 17 முதல் 25 ஆகிய தேதி வரை நடந்த முதலாவது ஹாக்கி இந்தியா சப்-ஜூனியர் மகளிர் அகாடமி தேசிய சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில், நீண்டகாலம் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த ரபி, பீகாரில் கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழந்து உள்ளார்.  அவரது மறைவுக்கு ஹாக்கி இந்தியா தலைவர் ஞானேந்திரோ நிங்கோம்பம் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்