ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி: இந்திய அணியின் கேப்டனாக சவிதா நியமனம்

ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சவிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-01-12 23:06 GMT
புதுடெல்லி,

10-வது ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் வருகிற 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் சீனா, இந்தோனேஷியா, தென்கொரியா, தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 21-ந் தேதி மலேசியாவையும், 23-ந் தேதி ஜப்பானையும், 24-ந் தேதி சிங்கப்பூரையும் எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் வருகிற ஜூலை மாதம் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலக கோப்பை பெண்கள் ஆக்கி போட்டிக்கு தகுதி பெறும்.

ஆசிய கோப்பை போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கமான கேப்டன் ராணி ராம்பால் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அணியில் இடம் பெறவில்லை. கோல்கீப்பர் சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான அணியில் அங்கம் வகித்த 16 வீராங்கனைகள் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர். மாற்று வீராங்கனைகளாக தீபிகா (ஜூனியர்), இஷிகா சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்திய அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: சவிதா (கேப்டன்), ரஜனி எதிமர்பு, பின்களம்: தீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா, நடுகளம்: நிஷா, சுஷிலா சானு புக்ராம்பாம், மோனிகா, நேஹா, சலீமா டெடி, ஜோதி, நவ்ஜோத் கவுர், முன்களம்: நவ்னீத் கவுர், லால்ரெம் சியாமி, வந்தனா கட்டாரியா, மரியனா குஜூர், ஷர்மிளா தேவி.

வீராங்கனைகள் தேர்வு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான்னேக் ஸ்கோப்மேன் கூறுகையில் ‘இது எங்களுக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அணி மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. சில அனுபவம் வாய்ந்தவர்களுடன், சர்வதேச போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்திய திறமையான இளம் வீராங்கனைகளும் இடம் பெற்று இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டி சற்று ஏமாற்றம் அளித்தாலும் (கொரோனாவால் பாதியில் விலக நேரிட்டது) இந்த சவாலான போட்டிக்காக நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம்’என்றார்.

மேலும் செய்திகள்