மீண்டும் மின்சார கட்டணம் உயருகிறதா?
அன்றாட வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மின்சாரம் மிக மிக முக்கியமானது. மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது.;
அன்றாட வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மின்சாரம் மிக மிக முக்கியமானது. மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எனவே சமுதாயத்தின் தேவைகள் அதிகமாக அதிகமாக மின்சாரத்தின் தேவையும் அதிகரித்துக்கொண்டே போவது தவிர்க்கமுடியாது. இந்தியாவில் அதிகபட்ச மின்சார தேவை உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 4-வது இடத்தில் இருக்கிறது. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தி இல்லை.
வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கித்தான் மின்சார தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வெளிச்சந்தையில் வாங்கி சமாளிக்காவிட்டால், நிச்சயமாக கடும் தட்டுப்பாட்டை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். அனல் மின்சார நிலையங்கள், புனல் மின்சார நிலையங்கள் மூலமும் மின்சார உற்பத்தி செய்யப்பட்டாலும், இப்போது பெருகிவரும் மின்சார தேவையை சமாளிக்க இவற்றால் மட்டும் முடியாது என்ற வகையில், சூரியசக்தி மின்சார நிலையங்கள், காற்றாலை மின்சார நிலையங்கள் மூலமும் மின்சார உற்பத்தி செய்யப்படுவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆண்டுக்கு 300 நாட்கள் அதிக அளவில் சூரிய ஒளி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. மேலும் வினாடிக்கு 9 மீட்டர் முதல் 11 மீட்டர் வரையிலான வேகத்துடன் கூடிய கடலோர காற்றின் சக்தியையும் தமிழ்நாடு கொண்டுள்ளதால், இந்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு தமிழ்நாட்டில் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மின்சார கட்டணம் மூலம் ஈட்டும் வருவாயைவிட செலவு மிக அதிகம் என்றவகையில், இத்தனை ஆண்டுகளாக பெருகி இருந்த செலவுகளை சரிகட்ட தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்று, இப்போது நிலுவையில் இருக்கும் கடன் தொகை ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடியாகும்.
தற்போது இருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஆண்டுதோறும் நுகர்வோர் விலைவாசி குறியீடு எண்ணுக்கு ஏற்பவோ அல்லது 6 சதவீதம் அளவோ, இதில் எது குறைவோ அந்த அளவு மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டது. இதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் அனைத்துவகை பயன்பாட்டுக்கும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜூலை 1-ந்தேதி தோறும் மின்சார கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என கூறியிருந்தது.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் நுகர்வோர் விலைவாசி குறியீடு அதாவது பணவீக்கம் 4.70 சதவீதம் என்ற அளவில் இருப்பதால், மின்சார கட்டணமும் இப்போது இருக்கும் கட்டணத்தைவிட 4.70 சதவீதம் உயரப்போகிறது. மின்சார வாரியத்தின் நிதி நிலையையும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவையும் கருத்தில்கொண்டால், இது தவிர்க்கமுடியாது என்றாலும், பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இது பெரும் சிரமத்தை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. என்றாலும், எதிர்காலத்தில் மின்சார வாரியத்தின் செலவுகளை குறைத்து, வெளிச்சந்தையில் வாங்க தேவையில்லாத வகையில் மின்உற்பத்தியை பெருக்கும் பல புதிய திட்டங்களை குறிப்பாக, அனல் மின்சார நிலையங்கள், புனல் மின்சார நிலையங்கள், சூரியசக்தி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்களை நிறைய தொடங்கி, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்கவேண்டும்.