பழைய சோறு தரும் ஆரோக்கியம்
அறிவியல் ஆராய்ச்சிப்படி பழைய சோறுதான் பல நோய்கள் வராமல் தடுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;
60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழறிஞர் ப.நடவரசு கூட்டங்களில் பேசும்போது, மண்பானையில் ஊற வைக்கப்பட்ட பழைய சோற்றை எடுத்து தட்டில் பிழிந்து வைத்து அதில் கெட்டித் தயிரை ஊற்றி 2 உப்புக்கல் போட்டு பிசைந்து மாவடு ஊறுகாயை வைத்து காலையில் சாப்பிட்டால் அதன் ருசியை எவ்வாறு சொல்வது? என்று அவருக்கே உரிய பாணியில் சொல்வார்.
இதைக் கேட்பவர்களுக்கு உடனடியாக நாவில் உமிழ்நீர் சுரந்து, பழைய சோறு சாப்பிடவேண்டும் என்ற ஆசை துளிர்விட்டுவிடும். நீண்ட நெடுங்காலமாக பழைய சோறுதான் நமது உணவு பட்டியலை அலங்கரித்தது. அப்படிப்பட்ட பழைய சோறு பிற்காலங்களில் கிராமத்துக்காரர்களின் சாப்பாடு என்று வகைப்படுத்தப்பட்டது. நாகரிக உலகில் இட்லி, தோசை, பொங்கல் என விதவிதமான உணவை பட்டியலில் சேர்த்துக்கொண்டனர்.
மதியம் ஆவி பறக்க சூடான சோறு, குழம்பு, கூட்டு என்றும், மாலையில் சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்ற தவறான அச்சத்தால் சப்பாத்தி, இடியாப்பம் என்று சாப்பிடும் பழக்கத்துக்கு மாறிவிட்டார்கள். ஆனால் இப்போது அறிவியல் ஆராய்ச்சிப்படி பழைய சோறுதான் பல நோய்கள் வராமல் தடுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1780-களில் பஞ்ச காலத்தில் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி சார்பில் ஏழைகளுக்கு பழைய சோறு கொடுத்ததால் அதை அப்போது கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி என்று மக்கள் அழைத்தனர். இப்போது அதே ஆஸ்பத்திரி அந்த பழைய கஞ்சியை ஆராய்ச்சி செய்து, அது உடல்நலத்துக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை உலகுக்கு அறிவித்து இருக்கிறது என்பதும் வரலாற்றின் சுழற்சியாகும்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆஸ்பத்திரியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பழைய சோறு குறித்து தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, மாப்பிள்ளை சம்பா மற்றும் ரேஷன் அரிசி சாதத்தை கோடை காலத்தில் மண் பானைகளில் வைத்து 8 மணி முதல் 10 மணி நேரம் வரையிலும், மழைக்காலத்தில் 14 மணி நேரம் வரையும் ஊறவைத்து ஆராய்ச்சி நடத்தினார்கள்.
அதனால் உருவாகும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும், இரும்பு சத்தையும் அதிகரிக்க செய்கிறது என்று கண்டுபிடித்தனர். ஊறவைக்கும் முன்பு 100 கிராம் அரிசியில் இரும்பு சத்து 3.4 கிராம் மட்டுமே இருந்தது. ஆனால் ஊறவைத்த பிறகு இரும்பு சத்து 73.91 கிராம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் பழைய சோறை தொடர்ச்சியாக 55 நோயாளிகளுக்கு காலை உணவாக கொடுத்த பிறகு 13 சதவீதம் பேருக்கு அந்த நோயின் அறிகுறியே இல்லாமல் போய்விட்டது. மற்றவர்களுக்கு நோயின் தன்மை 9 சதவீதமாக குறைந்துவிட்டது. நீரிழிவு நோய் வராமல் தடுப்பது, உடல் பருமன் ஏற்படாமல் தடுப்பது, கர்ப்பிணிகளுக்கு குழந்தை நன்றாக வளர்வது, குறைப்பிரசவம் ஏற்படாமல் தடுப்பது, கர்ப்பகால நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம் வராமல் காப்பாற்றுவது, அனைத்து வயதினருக்கும் இதய நோய் வராமல் தடுப்பது போன்ற பல நோய்களை விரட்டுவது மட்டுமல்லாமல், பல நோய்களை குறிப்பாக வயிற்றுப்போக்கை குணமாக்குகிறது என்ற ஆராய்ச்சி முடிவுகள் இன்றைய சமுதாயத்தை மீண்டும் நமது முன்னோர்கள் காலங்காலமாக பின்பற்றி வந்த பழைய சோற்றை சாப்பிடும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மொத்தத்தில் பழைய சோறு பல நோய்களை வராமல் தடுக்கும் சோறு, வந்தாலும் அதனை குணமாக்கும் சோறு.