களவாடப்பட்ட அனைத்து கோவில் சிலைகளையும் மீட்க வேண்டும்
தாங்கள் வழிபடுவது உண்மையான சிலையா? அல்லது போலி சிலையா? என்பதில் பக்தர்களுக்கு குழப்பம் இருக்கிறது.;
தமிழ்நாட்டில் உள்ள பழம்பெரும் கோவில்களுக்கு உயிரோட்டமான சிலைகள்தான் சிறப்பு. அது மூலவராகவோ, உற்சவராகவோ இருந்தாலும் அந்த சிலைகளில் உயிர் துடிப்பு இருக்கும். அதனால்தான் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் சிலையாக நிற்கும் ஆண், பெண் தெய்வங்களிடம் நேருக்கு நேர் பேசுவது போல மனம் உருகி பிரார்த்தனை செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் சிலைகளைப்போல வேறு எங்கும் கலைநயமிக்க சிலைகளை பார்க்கமுடியாது. தமிழ்நாட்டில் சின்னஞ்சிறு கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை ஏறத்தாழ 49 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்களில் கற்சிலை, ஐம்பொன் சிலை என உருவ வழிபாட்டுக்காக ஏதாவது ஒரு சிலை கண்டிப்பாக இருக்கும்.
ஊருக்கு வெளியே இருக்கும் வனக்கோவில்களில் கூட மிகவும் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ள சிலைகள் காட்சி தருவதை பார்க்கமுடியும். நமக்கு வழிபாட்டுக்குரியதாக இருக்கும் இந்த சிலைகள் வெளிநாடுகளில் உள்ள கலைக்கூடங்களில் காட்சி பொருளாக இருக்கின்றன. தமிழர்களின் கலையை வியந்து பார்ப்பதால் இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி இருக்கிறது.
கோவில்களில் உள்ள இந்த சிலைகளை அப்படியே வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்ல முடியாது என்பதால் இந்த சிலைகளை விற்று பெரும் பணம் சம்பாதிக்க நினைக்கும் சமூகவிரோதிகள் அதாவது திருட்டு கும்பல் சிலையை திருடுகிறார்கள். உண்மையான சிலைகளை எடுத்துவிட்டு போலியான சிலைகளை அங்கு வைத்துவிடுகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு தமிழகத்தில் 1,700 கோவில்களில் உள்ள உண்மையான சிலைகள் திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது என்று தெரிவித்தது பக்தர்களுக்கு பெரும் வேதனையை அளித்தது.
ஏனெனில் தாங்கள் வழிபடுவது உண்மையான சக்திவாய்ந்த சிலையா? அல்லது போலி சிலையா? என்பதில் பக்தர்களுக்கு குழப்பம் இருக்கிறது. சிலை திருட்டில் மிக பரபரப்பாக பேசப்பட்டது 1982-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலைதான்.
இந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மீட்க அரசு எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்றபோது அவரிடம் அந்நாட்டு பிரதமர் ஒப்படைத்தது வரலாற்று பதிவாகும். நம்மிடம் இருந்து களவாடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்ட சிலைகளை மீட்கும் பணி தற்போது மிக வேகமாக நடப்பது பாராட்டுக்குரியது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சிலை தடுப்பு போலீசார், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் இருந்து களவாடப்பட்ட 440 சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மீட்டுள்ளனர்.
இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடத்தி செல்லப்பட்டுள்ளதாக 76 சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஆஞ்சநேயர் சிலை உள்பட 16 சிலைகள் சிங்கப்பூரில் இருக்கிறது. அதை மீட்க அதிகாரிகள் குழு இப்போது சிங்கப்பூருக்கு செல்ல இருப்பது வரவேற்கத்தக்கது.
இதுபோல நெதர்லாந்திடம் உள்ள நாகை மாவட்டம் திருப்புகலூர் அக்னீசுவரர் கோவிலில் காணாமல் போன கண்ணப்ப நாயனார் சிலை, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கண்காட்சியகத்தில் இருக்கும் திருமங்கையாழ்வார் சிலையை மீட்டுக்கொண்டு வரும் முயற்சி விரைவில் இந்து சமய அறநிலையத்துறையால் நிறைவேற இருக்கிறது.
மேலும் வெளிநாடுகளில் இருக்கும் அனைத்து சிலைகளையும் மீட்டு கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ள கோவில்களை கணக்கெடுத்து அங்கிருந்த சிலைகளையும் கண்டுபிடித்து மீண்டும் அந்தந்த கோவில்களில் வைக்க இந்து சமய அறநிலையத்துறை தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும்.