வளமான இந்தியாவை உருவாக்கப்போகும் ஜென் இசட்-ஜென் ஆல்பா
2013 முதல் 2025 வரை பிறந்தவர்கள் “ஜென் ஆல்பா” என்று அழைக்கப்படுகின்றனர்.;
இந்தியாவை விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உயர்த்தவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. “இந்தியாவில் தயாரிப்போம்– உலகுக்காக தயாரிப்போம்” என்ற கருப்பொருளை முன்னிறுத்தி, தற்போது இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்க அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், 2030-ம் ஆண்டில் இந்தியாவை 10 டிரில்லியன் டாலர் (ரூ.900 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாற்றுவது என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த இலக்கை எட்டவேண்டும் என்றால், ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் கூடுதலாக ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.90 லட்சம் கோடி) பொருளாதார வளர்ச்சி உருவாக்கப்படவேண்டும்.
இந்த சூழலில், 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, அந்த இலக்கை அடையும் வகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களை வகுத்து வருகிறார். இதேபோல், மேலும் சில மாநிலங்களும் “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்தான் எங்களின் எல்லை” என்று அறிவித்து, அதற்கேற்ப தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள 10 டிரில்லியன் டாலர் இலக்கை அடைவதில் மாநிலங்களின் வளர்ச்சியும் முக்கிய ஆதாரமாக இருக்கும். 10 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை அடைவது மத்திய அரசுக்கும், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது மாநில அரசுகளுக்கும் எளிதான பணியாக இருக்காது. மத்திய அரசைப் பொறுத்தவரை, இனிவரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 6.7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி கட்டாயமாக இருக்கவேண்டும்.
இந்த வளர்ச்சி சாத்தியமானதே என்பதைக் காட்டும் வகையில், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இலக்கை அடைய மூலதன உருவாக்கமும், மனிதவள மூலதனமும் முக்கிய ஊக்கமாக அமையும். இந்தியாவைப் பொறுத்தமட்டில், இந்தப் பெரும் இலக்கை அடைவதற்கான மனித உழைப்பை வழங்கும் சக்தி இளைஞர்களிடமே அதிகமாக உள்ளது.
மனித சமூகத்தை பிறந்த ஆண்டுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தலைமுறைகளாக வகைப்படுத்துகின்றனர். அந்த வகையில், 1997 முதல் 2012-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் “ஜென் இசட்”, 2013 முதல் 2025 வரை பிறந்தவர்கள் “ஜென் ஆல்பா” என்று அழைக்கப்படுகின்றனர். ஜென் இசட் காலத்தில்தான் செல்போனும், இணையதளமும் வந்தன. ஜென் ஆல்பா காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடங்கியிருக்கிறது. இந்த இரண்டு தலைமுறைகளின் மக்கள் தொகை இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது.
இவர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கான உழைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர்கள். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா தலைமுறைகள்தான் இந்தியாவை ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்லப்போகின்றனர்.
இளம் வயதில் நீங்கள் செய்யும் பணிகள்தான் மற்றவர்களுக்கும் ஊக்கமாக அமையும். வலிமையான இந்தியா என்ற கனவை இந்த இரண்டு தலைமுறைகளே நனவாக்கும். அவர்களுடைய கனவுக்கு பின்னால் 140 கோடி மக்களும் இருக்கிறார்கள்” என்று பெருமிதத்தோடு கூறினார். ஆக இப்போது நாட்டின் முன்னேற்றம் ஜென் இசட் மற்றும் ஜென் ஆல்பா இளைஞர்களிடம்தான் இருக்கிறது.