22 ஆண்டுகால கோரிக்கை ஒரு துளி மையில் நிறைவேறியது!
தேர்தல் தேதி வெளியாகும் முன்பு இன்னும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.;
2026-ம் ஆண்டு பிறந்ததில் இருந்தே நாள்தோறும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். 3-ந்தேதி அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், 4-ந்தேதி பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம், நேற்று 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடக்கம்.
அடுத்த மாதம் தேர்தல் தேதி வெளியாகும் முன்பு இன்னும் பல திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதிய திட்டம்தான் அமலில் இருந்தது. நிதிச்சுமையை தவிர்க்க பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமலுக்கு கொண்டுவந்ததால், அப்போதைய முதல்-அமைச்சரான ஜெயலலிதா அதை தமிழக அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப்படுத்தினார்.
இதன்படி அரசு ஊழியர்கள் மாதந்தோறும் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பங்களிப்பு செய்யவேண்டும், அரசும் 18.5 சதவீதத்தை தனது பங்காக செலுத்தும். இந்த தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தொகை அரசு ஊழியர்களின் கணக்கில் சேர்ந்துகொண்டே இருக்கும்.
ஓய்வுபெறும்போது அந்த கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையில் 60 சதவீதம் ரொக்கமாகவும், மீதம் உள்ள 40 சதவீதத்தில் கிடைக்கும் வட்டித்தொகை ஓய்வூதியமாகவும் வழங்கப்படும். இந்தநிலையில், 2021 சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கூறியிருந்ததை நிறைவேற்றுவதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு வழங்கிய பரிந்துரைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ஆராய்ந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். இதன்படி, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது அவர்கள் வாங்கிய கடைசி மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஓய்வூதியர் இறந்துவிட்டால் அதில் 60 சதவீதம் அவர்களின் வாரிசுக்கு வழங்கப்படும். பென்ஷன் திட்டத்தின் பலனை அடைவதற்காக அரசு ஊழியர்களும் தங்கள் மாத சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிப்பாக வழங்கவேண்டும்.
அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகால கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் பேனாவின் ஒரு துளி மையால் கையெழுத்திட்டு நிறைவேற்றிவிட்டார் என அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடிவருகிறார்கள். ஏற்கனவே கடும் நிதிச்சுமையால் தத்தளிக்கும் தமிழக அரசு இந்த சுமையையும் கூடுதலாக எப்படி சமாளிக்கப்போகிறது? என்று அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, அரசு மேற்கொள்ளப்போகும் பல சீர்திருத்தங்கள் மூலம் இதற்காக நிதி திரட்டமுடியும்.
எடுத்துக்காட்டாக இப்போது தமிழ்நாட்டு பொருளாதாரத்தில் சேவைகள் அளிக்கும் பங்களிப்பு விகிதாசாரத்துக்கு இணையாக வரியில் இல்லை. எனவே இன்னும் வரி வளையத்துக்குள் வராத பல சேவைகளை கொண்டுவர திட்டம் இருக்கிறது என்றனர். அப்படி புதிதாக சேவைகளுக்கு வரி விதிக்கப்படும்பட்சத்தில் அந்த சுமை மக்கள் மீதுதான் விழும். மேலும் இனி அரசின் வரி வருவாயில் 22 சதவீதம் ஊழியர்களின் பென்ஷனுக்காக செலவாகிவிடும்.
எனவே கவனமான திட்டமிடுதலும் தேவை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியிருப்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும். மொத்தத்தில் கூட்டவேண்டியதை கூட்டி, கழிக்கவேண்டியதை கழித்து, பெருக்கவேண்டியதை பெருக்கி, வகுக்கவேண்டியதை வகுத்து அரசுக்கு தேவையான நிதியை திரட்டி விடுவோம் என உறுதிபட கூறுகிறார் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் உதயச்சந்திரன்.