மத்திய அரசாங்க கட்டுப்பாட்டில் மருத்துவ கலந்தாய்வா?

பிளஸ்-2 படிப்பில் அறிவியலை முதன்மை பாடமாகக்கொண்டு படித்த மாணவர்களின் உயர்படிப்பில் முதல் லட்சியம் மருத்துவ படிப்பாகவே இருக்கிறது.;

Update:2023-05-31 01:16 IST

பிளஸ்-2 படிப்பில் அறிவியலை முதன்மை பாடமாகக்கொண்டு படித்த மாணவர்களின் உயர்படிப்பில் முதல் லட்சியம் மருத்துவ படிப்பாகவே இருக்கிறது. எம்.பி.பி.எஸ் மட்டுமல்லாமல் பல் மருத்துவம் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் நீட் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்த தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், அதாவது கலந்தாய்வு நடக்கும்.

நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரிசைக்கிரமமாக மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதியை மருத்துவக்கல்வி இயக்குனரகம் பட்டியலிட்டு மாணவர்களுக்கு அறிவிக்கும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து, எந்தெந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடம் இருக்கிறது? எந்தெந்த கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் இருக்கிறது? என்பதை பார்த்து அவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லூரிகளை தேர்வு செய்துகொள்ளலாம். ஆக எந்த கல்லூரியில் படிக்கப்போகிறோம் என்பது மாணவர்களின் தேர்வாகத்தான் இருக்கிறது.

மொத்தத்தில் மாணவர் சேர்க்கையில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கிறது. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 இடங்களும், 19 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3 ஆயிரத்து 50 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில் 1,950 இடங்களும் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் போக நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 1,310 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் 740 இடங்களும் இருக்கின்றன. இதுதவிர மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அனுப்பப்படுகிறது. அந்த இடங்களை மட்டுமே மத்திய அரசாங்கம் கலந்தாய்வு நடத்தி நிரப்பும். இதுதான் இவ்வளவு ஆண்டுகளாக இருக்கும் நடைமுறை.

இப்போது திடீரென்று மாநில அரசாங்கம் கலந்தாய்வு நடத்தும் உரிமையை பறிக்கும் வகையில் ஒரு முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற இளநிலை மற்றும் எம்.டி, எம்.எஸ். போன்ற முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களையும் பொது கலந்தாய்வு மூலம் மத்திய மருத்துவ கலந்தாய்வு குழுவே நடத்த மத்திய அரசாங்கம் முடிவு செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த பொது கலந்தாய்வில் அந்தந்த மாநில அரசுகளின் இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும் என்றும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வித்தியாசமானது. இங்கு 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த புதிய முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஒரு குழு, மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க இருக்கிறது. நமது மாநிலத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசால்தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசாங்கம் இதில் நுழைவதை தமிழ்நாடு அரசு மட்டுமல்லாமல் தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டுமே தவிர, இருக்கும் உரிமையை பறிப்பது ஏற்புடையதல்ல என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்