அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு
ரசிகர்களின் அதிகப்படியான வரவேற்பு மற்றும் இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 26ம் தேதி நடைபெற இருந்த அனிருத்தின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் - ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் வரும் 26ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை எனும் இடத்தில் ஹுக்கும் எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையானது.
இந்நிலையில், இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அனிருத்தின் ஹுக்கும் இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்களின் பாதுகாப்பு, தரமான நிகழ்ச்சி ஏற்பாட்டை மனதில் வைத்து இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பதாகவும், விரைவில் புதிய தேதி, இடம் அறிவிக்கப்படும் . டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் முழு பணமும் 10 நாட்களில் திரும்ப வழங்கப்படும் என விழா ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.