நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

பண மோசடி செய்ததாக, நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-09-05 22:34 IST

மும்பை,

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும், தன்னிடம் பெற்ற ரூ.60 கோடியை தராமல் மோசடி செய்ததாக மும்பை போலீசில் தொழில் அதிபர் தீபக் கோத்தாரி என்பவர் புகார் அளித்தார்.

டீல் ‘டிவி' நிறுவனத்துக்கு ரூ.60 கோடி கடனாக வாங்கி விட்டு, பின்னர் அந்த நிறுவனம் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த புகாரில் அவர் தெரிவித்தார். மேலும், தன்னிடம் வாங்கிய ரூ.60 கோடியை, வேறு நிறுவனங்களில் ஷில்பா ஷெட்டி- ராஜ் தம்பதி முதலீடு செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை போலீசார் பிறப்பித்துள்ளனர். இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதால், வழக்கின் விசாரணையை சுமுகமாக நடத்துவதற்கு உதவியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லுக் அவுட் நோட்டீஸ் என்பது ஒரு நபர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கவும் அல்லது அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்