எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஷாருக்கான்
இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு நீங்கள் ஓய்வெடுக்கலாமே. எப்போது ஓய்வெடுப்பீர்கள்? என்ற ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளார்.;
மும்பை,
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்திற்காக வென்றுள்ளார். தனது 33 வருட சினிமா கெரியரில் ஷாருக்கான் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்துள்ளது.
இந்த நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஷாருக்கான் தன் எக்ஸ் பக்கத்தில், “வெளியே மழை பெய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்... அதனால் இந்த இனிமையான சூழலை உங்களுடன் செலவிட விரும்புகிறேன். அடுத்த அரை மணி நேரத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. உங்களுக்கு நேரம் இருந்தால் கேள்வி கேட்கலாம்” என்றார். அதைத் தொடர்ந்து ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.
ஒரு ரசிகர், “உங்களுக்கு வயதாகிவிட்டதே... மற்ற இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு நீங்கள் ஓய்வெடுக்கலாமே. எப்போது ஓய்வெடுப்பீர்கள்?” என்றார். அதற்கு ஷாருக் கான், “சகோதரரே, உங்கள் கேள்வியில் இருக்கும் குழந்தைத்தனத்தை மாற்றி கொஞ்சம் முதிர்ச்சியான கேள்வி கேட்க முடிந்தால் கேளுங்கள். அதுவரை நீங்கள் ஓய்வு பெறுவதுதான் நல்லது” என்றார்.
ஒரு ரசிகர், “தேசிய விருதை வென்ற பிறகு நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஷாருக்கான், “ஆமாம்! நான் தேசத்தின் ராஜாவைப் போல உணர்கிறேன்!!! இன்னும் சிறப்பாக செயல்படவும், கடினமாக உழைக்கவும் உத்வேகப்படுத்துகிறது. பொறுப்பும், மரியாதையும் கூடியிருக்கிறது” என்றார்.
இன்னொரு ரசிகரின் “உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்ன?” என்றக் கேள்விக்கு ஷாருக்கான், “பொழுதுபோக்குக்கான நேரமே இல்லை. பிசியாக மட்டுமே இருக்கிறேன். இடையிடையே கொஞ்சம் புத்தகம் வாசிக்கிறேன். படபிடிப்புக்கான டயலாக்கை ஒத்திகை பார்ப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போது நன்றாக தூங்குவேன்” என்றார்.
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'தி பா***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்ற வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.இந்த வெப் தொடர் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டநிலையில், தற்போது பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்தத் தொடர் எதை பற்றியது என்பதைப் தெரிவிக்கும் வகையில், வருகிற 20 அன்று முன்னோட்டம் வெளியாக உள்ளது. பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால் மற்றும் மோனா சிங் ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.