‘ஜனநாயகன்’ தணிக்கை சான்று விவகாரத்தில் இன்று தீர்ப்பு

‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.;

Update:2026-01-27 08:50 IST

சென்னை,

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜனநாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது.

பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 20-ந்தேதி உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்