முதல்வரை அங்கிள் என விஜய் அழைத்ததில் தவறில்லை - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்
தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டில், ஸ்டாலினை அங்கிள், ராங் அங்கிள் என்று ஸ்டாலினைச் சாடியிருந்தார்.;
சென்னை,
2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த சூழலில் 2-வது மாநில மாநாடு கடந்த 21ம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் திமுக குறித்து பேசிய விஜய், கடந்த 4 ஆண்டுகளில் துறை சார்ந்த ஊழல்கள், மக்கள் பிரச்சினைகள் குறித்து கேள்விகளை அடுக்கினார். மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்து நிறைவேற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி அதற்கு மக்கள் இல்லை என்று அளித்த பதில் உங்களுக்கு கேட்கிறதா ‘அங்கிள் ஸ்டாலின்’ என்று அரங்கம் அதிர விஜய் பேசினார். இதற்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஸ்டாலின் அங்கிள், ராங் அங்கிள் என்று ஸ்டாலினைச் சாடியிருந்தார் விஜய். அவரின் இந்த பேச்சுக்கு சீமான், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் விஜய்யின் இந்தப் பேச்சுத் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அனுபவமும் கிடையாது. ஆனால் விஜய் பேசியது எதுவும் தவறாகத தெரியவில்லை. அவர் நேரில் பார்த்தாலும் வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள் என்று தான் பேசுவார். அதைத்தான் அன்று பப்ளிக்கில் சொல்லி இருக்கிறார். அதற்கு வேறு ஒரு பொருளை எடுத்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறான வார்த்தையே கிடையாது. அன்றைக்கு தொண்டர்களை ஜாலிப்படுத்துவதற்காக அப்படி பேசி இருக்கலாம். இதை விட்டு விட்டு... நாட்டுக்கு என்ன நல்லதோ அதை செய்ய வேண்டும்” என்று கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.