'ஜனநாயகன்' அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பட தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த படம் ரிலீஸ் ஆகாவிட்டால், அதன் பிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்தால் மட்டுமே படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.;

Update:2026-01-27 13:09 IST

சென்னை,

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. அதற்கு காரணம் சென்சார் பிரச்சினை. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம், தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது.

‘ஜனநாயகன்’ பட விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச்,“தணிக்கை வாரியத்துக்கு உரிய அவகாசம் வழங்கப்படவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே சென்சார் போர்டு தலைவர் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம். சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கை தனி நீதிபதி பி.டி. ஆஷாவே விசாரிக்க வேண்டும். விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டுக்கு உரிய அவகாசம் வழங்கி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகுவது மேலும் தள்ளிப்போயுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக இந்த படம் ரிலீஸ் ஆகாவிட்டால், அதன் பிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்தால் மட்டுமே படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி பட தயாரிப்பு நிறுவனம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரனுடன் பட தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது பட தயாரிப்பு நிறுவனத்தின் முன்பாக மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. தலைமை நீதிபதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது; இன்னொன்று, தனி நீதிபதியிடம் மீண்டும் அணுகி வழக்கை விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்வது; மற்றொன்று, மறு தணிக்கைக்கே சென்றுவிடலாமா என்பது- இது தொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை நடத்துகிறது. இன்று மாலை 3 மணிக்குள் முடிவு செய்து அடுத்தகட்ட முடிவு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்