சேலம் வீரபத்திர சுவாமி கோவில் சிறப்புகள்

பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீரபத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.;

Update:2025-10-07 17:54 IST

சேலத்தின் மைய பகுதியில் வீரபத்திரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் முத்துப்பல்லக்கில் வீதி உலா செல்கிறார். பொதுவாக வீரபத்திரருக்கு வில்வம், வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். ஆனால், இங்கு இவருக்கு மூங்கில் இலை மாலை அணிவிப்பது விசேஷம்.

பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீரபத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.

மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தனிச்சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர், 'ஜங்கமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இவரையும் வீரபத்திரராகவே பாவித்து பக்தர்கள் பூஜை செய்கின்றனர். ஐப்பசி பௌர்ணமியில் ஐங்கமேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண், பெண் இருபாலருக்கும் பிரசாதமாக தருவர். ஆனால் இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

நவக்கிரக சன்னிதி எதிரில், ராஜ கணபதி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.

திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்காக இக்கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விநாயகர் மற்றும் சனீஸ்வரரை பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் சிவனுக்கு அபிஷேகம் செய்தும், வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்