நலம் தரும் நந்தி வழிபாடு
சிவாலயங்களில் நந்தி பகவானை வழிபட்டால்தான், சிவ வழிபாடு முழுமை அடையும்.;
சிவபெருமானின் வாகனமாக இருப்பவர் நந்தி பகவான். சிவன் கோவில்களில் நம்மை முதலில் வரவேற்பவராக நந்தி பகவான் உள்ளார். சிவனின் அருளை பெற வேண்டும் என்றால், நந்தி பகவானை முதலில் வழிபட வேண்டும். சிவாலயங்களில் சிவன் சன்னிதிக்கு எதிரே நந்தி பகவான் வீற்றிருப்பார். நமது பிரச்சினைகளையும், வேண்டுதல்களையும் நந்தி பகவானின் காதுகளில் சொன்னால், அவர் சிவபெருமானிடம் சொல்லி நமது வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதாக ஐதீகம்.
நந்தி என்றாலே 'ஆனந்தம்' என்றுதான் பொருள். நந்தி பகவானை வழிபட்டால் வாழ்வில் ஆனந்தம் ஏற்படும் என்பது நம்பிக்கை. நந்தி பகவானை வணங்கும்போது, முதலில் அதன் வால் பகுதியை வணங்க வேண்டும். பின்பு, வில்வ இலை, மலர்களை சமர்ப்பித்து, நெய் விளக்கேற்ற வேண்டும். நந்தியின் காதுக்கு அருகே சென்று 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லவேண்டும். அடுத்து நந்தியை வலதுபக்கமாக வலம் வந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
நந்தி பகவானை வழிபட்டால்தான், சிவ வழிபாடு முழுமை அடையும். நந்தியை வழிபடுவதால், தீய எண்ணங்கள் நீங்கி, மனதிற்கு அமைதி கிடைக்கும். அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் நோய்கள் அகலும், வறுமை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறும். பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்பட முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவாலயங்களுக்கு வருவதாக நம்பப்படுகிறது. இதனால் பிரதோஷ காலங்களில் நந்தியை வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.